ஒலிம்பிக் தந்த மாற்றம்


லண்டனில் கடந்த ஆண்டு நடந்த 30வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 பதக்கங்களை வென்றது. பதக்கம் வென்று சாதித்தவர்களின் வாழ்க்கை தற்போது எப்படி மாறி உள்ளது என்பதை அவர்களிடமே கேட்போம்.

சுஷில் குமார்(மல்யுத்தம், வெள்ளி):

கடந்த 2008ல் பீஜிங் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முன்பு எப்படி இருந்தேனோ, இதுவரை அப்படி தான் இருக்கிறேன். ஒரு நட்சத்திரமாக என்னை கருதவில்லை. 

லண்டன் ஒலிம்பிக் பதக்கத்திற்கு பிறகு எந்த ஒரு பொருளும் வாங்கவில்லை. என்னிடம் சொகுசு கார் முதல் வீடு வரை எல்லாம் உள்ளது. மல்யுத்தம் தான் எனக்கு வாழ்க்கை. அதன் வழியில் போகவே விரும்புகிறேன்.

யோகேஷ்வர் தத்(மல்யுத்தம், வெண்கலம்):

பதக்கம் வென்று நாடு திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். எனது குடும்பத்தினர்கள், பயிற்சியாளர், நண்பர்கள் என எல்லாருடைய முயற்சி தான் நான் சாதிப்பதற்கு காரணமாக அமைந்தது. ஒரு ஆடி கார் வாங்கியுள்ளேன். தற்போது நிறைய பாராட்டு விழாக்களில் பங்கேற்கிறேன். போட்டியில் கவனம் செலுத்துவதை தவிர, வேறு எதிலும் ஆர்வம் இல்லை. 

செய்னா நேவல்(பாட்மின்டன், வெண்கலம்):

பொதுவாக நான் எந்த ஒரு பிரச்னையும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. ஒரு நட்சத்திரமாக என்னை என்றும் கருதியது கிடையாது. நான் ஒரு சாதாரண பாட்மின்டன் வீராங்கனை. கடவுளின் ஆசியால் சாதிக்கமுடிந்தது. சமீபத்தில் "ஐ-போன்' ஒன்று வாங்கினேன். 

தாய்லாந்து தொடருக்கு முன் பி.எம்.டபிள்யு கார் வாங்கினேன். ஒலிம்பிக்கிற்கு பிறகு சில போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. 

மேரி கோம்(குத்துச்சண்டை, வெண்கலம்):

என் கணவர் தான் பக்கபலமாக உள்ளார். பதக்கத்திற்கு பின் பெயர், புகழ், பணம் என எல்லாம் எனக்கு கிடைத்தது. இருந்தாலும் எனது குத்துச்சண்டை அகாடமியை தான் பெரிய சொத்தாக கருதுகிறேன். பாராட்டு விழாவில் பங்கேற்கும் போது, மனது முழுவதும் குழந்தைகளை பற்றிதான் இருக்கும்.

ககன் நரங்(துப்பாக்கி சுடுதல், வெண்கலம்):

 சரிவுகளின் போது எனது குடும்பத்தினரும், நண்பர்களும் தான் தூண் போல உறுதுணையாக இருந்தனர். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தேன். டில்லியில் நடந்த "பார்முலா-1' கார்பந்தயத்தை கொடி அசைத்து முடித்து வைத்தது மறக்க முடியாதது. துப்பாக்கி சுடுதலை சிறிய கிராமங்கள் வரை எடுத்து சென்று, திறமையான இளைஞர்களை தேர்வு செய்து, முறையான பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளேன். 

விஜய் குமார்(துப்பாக்கி சுடுதல், வெள்ளி):

 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு 15 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளாமல் தவித்தேன். பதக்கம் வெல்ல என் பெற்றோர் தான் முழுக்காரணம். அடுத்து வரும் போட்டிகளுக்காக இரண்டு புதுரக துப்பாக்கி மற்றும் அதிகம் தோட்டாக்களை வாங்கினேன். ஒரு துப்பாக்கி சுடும் வீரருக்கு இது இரண்டும் தான் முக்கியமான சொத்து.

சமீபத்தில் ஒரு பள்ளியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன். அப்போது என் பள்ளி நினைவுகள் வந்தது.

சர்வதேச அளவில் பயிற்சி மேற்கொள்ளும் அளவிற்கு ஒலிம்பிக் பயிற்சி மையத்தை உருவாக்குவேன். திறமையான கல்லூரி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிப்பேன். 

0 comments:

Post a Comment