சேவக்கை தொடர்ந்து அபாய நிலையில் காம்பிர்


சேவக்கை தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் காம்பிரும், இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் அபாயத்தில் உள்ளார்.

இந்திய அணியின் துவக்க வீரர் காம்பிர், 31. இதுவரை 54 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், கடைசியாக 2010, சிட்டகாங்கில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் (116) அடித்தார். இதன் பின் விளையாடிய 26 டெஸ்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், 2012, ஜூலையில் இலங்கைக்கு எதிரான கொழும்பு போட்டியில் சதம் அடித்தார். இதன் பின் 9 போட்டிகளில் சதம் அடிக்கவில்லை என்றாலும், இரு அரைசதம் அடித்துள்ளார்.

இருப்பினும், சமீபத்தில் சேவக் நீக்கப்பட்டது போல, இவரது இடமும் அணியில் கேள்விக்குறியாகத் தான் உள்ளதாம். இப்போதைக்கு சரியான மாற்று வீரர் இல்லாததால் தான் காம்பிர் அணியில் நீடித்து வருகிறார். குறைந்தது டெஸ்ட் அணியில் இருந்தாவது நீக்க வேண்டும் என, ஓய்வு பெற்ற சீனியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

யார் மாற்று: 

சரி, காம்பிரை தூக்கி விட்டால் யாரை கொண்டு வருவது. முரளி விஜய், அபினவ் முகுந்த் ஏற்கனவே அணியில் இருந்து மோசமான "பார்ம்' காரணமாக நீக்கப்பட்டவர்கள். ரகானேவும் ஏமாற்றுகிறார். உன்முக்த் சந்த்தும் இன்னும் "ரெடியாக'வில்லை. 

இந்நிலையில், வேறு வழியின்றி சமீபத்தில் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்து வரும் முரளி விஜய் பக்கம் தான் காற்று அடிக்கிறது. ஒருவேளை காம்பிருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து, "பார்ம்' திரும்பும் வரை காத்திருக்கலாம் என முடிவெடுத்தால், முரளி விஜய் நிலை தர்மசங்கடம் தான். 

தொடர்ந்து வாய்ப்பு: 

ஏனெனில், காம்பிர் சதம் தான் அடிக்கவில்லை தவிர, தொடர்ந்து 30, 40 ரன்கள் அடிப்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு இவருக்கு தேவை தன்னம்பிக்கை தான். ஏனெனில் "டாப்' வீரர்கள் அனைவருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படுவது சகஜம் தான். இதில் எப்படி மீண்டு வருகின்றனர் என்பது தான் முக்கியம். 

கடினம் தான்: 

காம்பிரை பொறுத்தவரையில் துணிச்சலான அணுகுமுறையின் மூலம் தான் மீண்டு வர முடியும். சமீபத்தில் கேப்டன் பதவியை குறிவைத்து இவர் செயல்படுவதாக புகார் எழுந்தது. கோல்கட்டா டெஸ்ட் போட்டிக்கு முன், காம்பிர் மீது அணியின் கேப்டன் தோனி, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) புகார் தெரிவித்தார் என செய்திகள் வெளியானது. 

இதையெல்லாம் மறந்து, முதலில் அணிக்கு தேவையான ரன்கள் சேர்க்க வேண்டும். இல்லையெனில், அணியில் இடத்தை தக்கவைப்பதே கடினம் தான். 

0 comments:

Post a Comment