கேப்டன் பதவியில் நீடிக்கலாமா? - தோனிக்கு அட்வைஸ்


இளம் வீரர்களுக்கு வழி விட்டு, "டுவென்டி-20' அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும்,'' என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

"டுவென்டி-20' உலக கோப்பை போட்டியின் முதல் கோப்பையை இந்திய அணிக்கு முதன் முறையாக (2007) வென்று தந்தவர் கேப்டன் தோனி. தொடர்ந்து கேப்டன் பணியில் ஜொலிக்கும் இவர், 2010ல் ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக், 2011ல் ஐ.பி.எல்., என, மூன்று முறை உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில், சென்னை அணிக்காக கோப்பை வென்று கொடுத்தார். 

தவிர, 2008, 2012ல் பைனல், 2009ல் அரையிறுதி வரை அணியை கொண்டு சென்றார். இவரது பலமே "டுவென்டி-20' தான். அப்படி இருக்கையில் சமீபத்தில் டிராவிட் கூறுகையில்,"ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும்,' என்றார். 

இந்த வரிசையில் இப்போது ரமீஸ் ராஜாவும் இணைந்துள்ளார். 

ரமீஸ் ராஜா கூறியது:

இந்திய "டுவென்டி-20' அணியை முன்னேற்ற வேண்டுமெனில், கேப்டன் பதவியில் இருந்து தோனி தானாக முன்வந்து விலக வேண்டும். அப்போது தான் இளம் வீரர்கள் கேப்டன் பணிக்கு தயாராக முடியும். கேப்டன், நல்ல நிர்வாகிகள் என்பவர்கள், அணியின் நலனுக்காக கடின முடிவுகளை எடுக்கத் தயங்கக் கூடாது. 

இந்தியாவைப் பொறுத்தவரையில் ரசிகர்கள் புள்ளி விவரங்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பர். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எத்தனை போட்டிகளில் வென்றுள்ளது என பார்ப்பதில்லை. 

இவ்வாறு ரமீஸ் ராஜா கூறினார்.

இந்திய அணியின் "பேட்டிங் ஆர்டர்' குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியது:

கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் என்பது மிகவும் கடினமான பணி. 300 பந்துகளுக்கு உட்கார்வது, எழுவது என்பது சாதாரண விஷயமல்ல. இந்நிலையில், தோனி பேட்டிங்கில் நான்காவதாக வருவது என்பது மனிதத்தன்மை அற்றது. 

இந்த இடத்தில் தோனியால் தேவையான ரன்களை எடுக்க முடிவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் கேப்டன் தோனி, பேட்டிங்கில் 6வது இடத்தில் தொடர்ந்து களமிறங்க வேண்டும். 

பவுலிங்கில் இஷாந்த் சர்மாவின் வேகம் குறைந்து விட்டது. இருப்பினும், தவறுகளை உடனே திருத்திக் கொள்கிறார். முதல் போட்டியில் 86 ரன்கள் கொடுத்த இவர், அடுத்து சுதாரித்துக் கொண்டார். 

ஸ்ரீசாந்த் வேகத்துடன், பந்தை "சுவிங்' செய்வதிலும் வல்லவர். இவரது உடற்தகுதி சரியாக இருந்தால், அனைத்து வித கிரிக்கெட்டிலும் பங்கேற்கலாம்.

இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

0 comments:

Post a Comment