தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் சதம் அடிக்க, நியூசிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி கிம்பர்லியில் நடந்தது. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி "பீல்டிங்' தேர்வு செய்தார்.
கப்டில் ஏமாற்றம்:
நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் கப்டில் "டக்' அவுட்டானார். வாட்லிங் (12) நிலைக்கவில்லை. பின் இணைந்த வில்லியம்சன், எலியட் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது. எலியட் (48) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் ஒருநாள் அரங்கில் 3வது சதம் எட்டினார்.
கேப்டன் பிரண்டன் மெக்கலம் (17) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் நாதன் மெக்கலம் (19), மில்ஸ்(15)கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் (145) அவுட்டாகாமல் இருந்தார்.
ஸ்மித் அரைசதம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குவின்டன் டிகாக் (25) ஏமாற்றினார். பின் இணைந்த ஸ்மித், இங்ராம் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்மித் (66) தனது 47வது அரைசதத்தை பதிவு செய்தார். இங்ராம் (79) தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பெகார்டின் (31), மார்னே மார்கல் (19*) ஓரளவு கைகொடுத்தனர்.
மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. தென் ஆப்ரிக்க அணி 49.1 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி, புதிய வரலாறு படைத்தது.
முன்னதாக 2000-01, 2005-06, 2007-08ல் தென் ஆப்ரிக்கா சென்ற நியூசிலாந்து அணி, தொடரை இழந்து ஏமாற்றியது.
0 comments:
Post a Comment