கொச்சியில் பதிலடி கொடுத்தது இந்தியா


கொச்சியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ராஜ்கோட்டில் பெற்ற தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது.

டிண்டா நீக்கம்... 

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. 

இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி கொச்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்தார். இந்திய அணி அசோக் டிண்டா நீக்கப்பட்டு ஷமி அகமது சேர்க்கப்பட்டார். 

ரெய்னா அரைசதம்... 

இதையடுத்து பேட்டிங்கை துவக்கிய இந்திய அணிக்கு கம்பீர், ரகானே ஜோடி ஏமாற்றம் அளித்தது. இருவரும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். கம்பீர் 8, ரகானே 4 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து விராத் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த யுவராஜ், இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தார். 

5 பவுண்டரிகள் விளாசிய யுவராஜ் 37 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி 37 ரன்களுக்கு அவுட்டானார். பொறுப்புடன் பேட் செய்த ரெய்னா, அரைசதம் கடந்து அசத்தினார். 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்த அவர் 55 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 

ஜடேஜா 37 பந்தில் 61 ரன்... 

ஏழாவது வீரராக வந்த ரவீந்திர ஜடேஜா, கேப்டன் தோனியுடன் இணைந்து ஆட்டத்தின் போக்கினை மாற்றினார். தோனி 66 பந்தில் 72 ரன்கள் எடுத்தார். 2 சிக்சர், 8 பவுண்டரி விளாசிய ஜடேஜா, 37 பந்தில் 61 ரன்கள் குவித்து, ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

இந்தியா பதிலடி... 

சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியை புவனேஷ் குமார், ஷமி அகமது ஜோடி மிரட்டியது. பெல் ஒரு ரன்னுக்கும், குக் 17 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். பீட்டர்சன் 42, ரூட் 36 ரன்கள் எடுத்தனர். கீய்ஸ்விட்டர் 18 ரன்கள் எடுத்தார். 

மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்ப இங்கிலாந்து அணி 36 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார், அஸ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

ரவிந்திர ஜடோனா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது ஒரு நாள் போட்டி வரும் 19ம் தேதி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறவுள்ளது. 

0 comments:

Post a Comment