கோல்கட்டாவில் விளையாடுவாரா கோஹ்லி?


சென்னை போட்டியில் காயமடைந்த விராத் கோஹ்லி, கோல்கட்டா ஒருநாள் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. 

இப்போட்டியின் போது, பவுலிங் செய்த இந்திய வீரர் விராத் கோஹ்லி, 24, கால் வழுக்கி கீழே விழுந்தார். முழங்காலில் பலமாக அடிபட, மைதானத்தை விட்டு வெளியேறிய இவர், மறுபடியும் "பீல்டிங்' செய்ய வரவில்லை. 

இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி கோல்கட்டாவில் வரும் 3ம் தேதி நடக்கிறது. இதில் விராத் கோஹ்லி விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இவரது காயத்துக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கப்பட்டு, அதன் முடிவு வெளியான பிறகு தான், விராத் கோஹ்லி பங்கேற்பது குறித்து தெரியவரும்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் ஜக்தலே வெளியிட்ட அறிக்கையில்," விராத் கோஹ்லியின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவரது கால் முக்கிய சதை நார்கள், எவ்வித சேதமும் அடையவில்லை. 

முழங்காலில் உள்ள திரவத்தில் தான் பிரச்னை ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் அதுவும் சரியாகி விட்டது. கோல்கட்டா ஒருநாள் போட்டியில் விளையாடுவாரா, இல்லையா என்பது குறித்த முடிவு, விரைவில் எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பங்கேற்க இரு அணி வீரர்களும், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று கோல்கட்டா சென்றனர். பாகிஸ்தான் அணியின் முகமது சமி, முகமது இர்பான், சோயப் மாலிக் உள்ளிட்டோர் தனியார் ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

இந்திய அணியின் கேப்டன் தோனி, ஜடேஜா, அசோக் டிண்டா, பயிற்சியாளர் பிளட்சர் மட்டும் இங்கு வந்தனர். மற்ற வீரர்கள், இன்று வருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணியினரும் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக இருந்தது. ஆனால், இது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து மேற்குவங்க கிரிக்கெட் சங்க பொருளாளர் பிஸ்வருப் கூறுகையில்,""இரு அணியினரும் இணைந்து புத்தாண்டை கொண்டாட முடிவு செய்திருந்தனர். இது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் தங்களது வீட்டுக்கு சென்று புத்தாண்டை கொண்டாட உள்ளனர். 

பிரதமர் மன்மோகன் சிங்கை, போட்டியைக் காண அழைப்பு விடுக்க இருந்தோம். டில்லி மாணவி மரண சம்பவத்தால், அவர் வர விரும்பவில்லை. கபில்தேவ், வெங்சர்க்கார் உள்ளிட்ட முன்னாள் வீரர்களை அழைத்து கவுரவிக்க உள்ளோம்,''என்றார். 

0 comments:

Post a Comment