கேப்டன் பதவியை உதறுங்கள் - தோனிக்கு டிராவிட் அட்வைஸ்


தோனி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக நீடிப்பது கடினம். இதனை உணர்ந்து "டுவென்டி-20' போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும்,'' என, டிராவிட் ஆசோசனை கூறினார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி இழந்தது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் பறிகொடுத்தது. 

இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியது:

டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட தோனிக்கு தகுதி உள்ளது. இப்பொறுப்பில் சிறப்பாக செயல்பட முடியும். அனைத்து நேரங்களிலும் கேப்டனாக இருந்தால், அவருக்கே சலிப்பு ஏற்பட்டு விடும். 

எனவே, "டுவென்டி-20', மற்றும் ஐ.பி.எல்., சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தலாம். அதே நேரத்தில் "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் போட்டியில் சாதாரண வீரராக நீடிக்கலாம்.

தற்போதைய நிலையில் கேப்டன் பதவிக்கு தோனிக்கு மாற்று வீரர் யாரும் கிடையாது. ஒருகட்டத்தில் காம்பிரை நியமிக்கலாம் என நினைத்தோம். ஆனால், காம்பிர் டெஸ்டில் "பார்ம்' இல்லாமல் தவித்ததால் சிக்கல் ஏற்பட்டது. 

மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்குமான கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லியிடம் அளிக்கலாம். இளம் வீரராக இருப்பதால், இவருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. 

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை நிலையான இடத்திற்கு கொண்டு சென்ற பின் கேப்டன் பொறுப்பை அடுத்த நபரிடம் தோனி கொடுக்கலாம். இவரது தலைமைப் பண்பை பாராட்டாமல் இருக்க முடியாது. 

சமீபத்திய நாக்பூர் டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். அப்போது வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா ஓவரில், தோனி பயப்படாமல் "ஸ்டம்சிற்கு' அருகில் நின்றார். தவிர, இக்கட்டான நிலையில் அணியை பலமுறை மீட்டுள்ளார். 

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment