பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான இரண்டு 20 ஒவர் போட்டித்தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.
3 ஒருநாள் போட்டித் தொடரில் கடந்த 30-ந்தேதி சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியும் இந்திய அணிக்கு உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாட வேண்டும்.
சென்னையில் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம். கேப்டன் டோனி, ரெய்னா தவிர முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாகவே விளையாடினார்கள்.
7 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டது தான் ஏமாற்றம் அளிக்கிறது. காயம் அடைந்துள்ள வீராட் கோலி முழு உடல் தகுதியுடன் இல்லை. இதனால் அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவது உறுதியில்லை. அவரது உடல் தகுதி பற்றி இன்று முடிவு தெரியவரும். வீராட் கோலி இடம் பெறாத பட்சத்தில் ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஒரு வேளை வீராட் கோலி ஆடும் பட்சத்தில் ஜடேஜாவுக்காக ரோகித் சர்மா கழற்றி விடப்படலாம். 2-வது முதன்மை சுழற்பந்து வீரரான அமித் மிஸ்ரா தேவைப்பட்டால் வேகப்பந்து வீரர்களில் ஒருவர் நீக்கப்படலாம்.
அசோக் திண்டா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் வேகப்பந்தில் உள்ளனர். ஷேவாக்- காம்பீர் ஜோடி தொடக்கம் சமீப காலமாக அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இதனால் இருவரும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தருவது அவசியமாகும்.
நாளைய முக்கியமான ஆட்டத்தில் இருவரும் சிறந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்க்க வேண்டும். இதேபோல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலானது. பாகிஸ்தான் அணி நாளைய ஆட்டத்தில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி 2005-ம் ஆண்டு 6 போட்டித்கொண்ட ஒருநாள் தொடரை 4-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. பாகிஸ்தான் அணியின் பலமே வேகப்பந்து வீச்சுதான்.
முகமது இர்பான், ஜுனைத்கான், உமர்குல் ஆகிய வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். பேட்டிங்கில் நாசிர் ஜாம்ஷெட், முன்னாள் கேப்டன்கள் யூனுஸ்கான், சோயிப்மாலிக் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா:- டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராட் கோலி, யுவராஜ்சிங், ரோகித்சர்மா, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், இஷாந்த்சர்மா, அசோக் திண்டா, ரவிந்திர ஜடேஜா, ரகானே, அமித் மிஸ்ரா, ஷமி அகமது.
பாகிஸ்தான்:- மிஸ்பா-உல்- ஹக் (கேப்டன்), ஹபீஸ், நாசிர் ஜாம்ஷெட், அசார் அலி, யூனுஸ்கான், சோயிப் மாலிக், கமரன் அக்மல், ஜுனைத்கான், உமர்குல், அஜ்மல், முகமது இர்பான்.
0 comments:
Post a Comment