கோல்கட்டாவிலும் சொதப்பல் - தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான்




சென்னையை தொடர்ந்து கோல்கட்டா ஒரு நாள் தொடரிலும் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் பாகிஸ்தான் ஒரு நாள் தொடரை 2;0 என்ற கணக்கில் வென்றது. 

இந்த அணி சார்பில் சிறப்பாக பேட் செய்த நசிர் ஜாம்ஷத் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். 

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றது. 

இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று கோல்கட்டாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா இடம்பிடித்தார்.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு நசிர் ஜாம்ஷத், முகமது ஹபீஸ் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை இந்த ஜோடி நாலாபுறமும் சிதறடித்தது. பவுண்டரிகளாக விளாசிய இந்த ஜோடி ரன் விகிதம் ஆறுக்கு குறையாமல் பார்த்து கொண்டது. 

முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹபீஸ் அவுட்டானார். 74 பந்தில் 76 ரன்கள் விளாசிய இவர் ரவிந்திர ஜடேஜா பந்துவீச்சில் போல்டானார். அடுத்து வந்த அசார் அலி (2), யூனிஸ் கான் (10), மிஸ்பா உல் ஹாக் (2) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேற பாகிஸ்தானின் ரன் வேகம் ஓரளவு கட்டுக்குள் வந்தது. 

இந்தியா உடனான போட்டிகளிலும் எப்போதும் சிறப்பாக பேட் செய்யும் சோயப் மாலிக் 24 ரன்களுக்கு அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட் வரிசையாக விழுந்தாலும் மறுபக்கம் சிறப்பாக பேட் செய்த ஜாம்ஷத் சென்னையை தொடர்ந்து கோல்கட்டாவிலும் சதம் விளாசினார். 

அவர் 2 சிக்சர், 12 பவுண்டரிகள் உட்பட 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக வெளியேற ஒரு கட்டத்தில் 300 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி 48.3 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

251 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கம்பீர் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து விராத் கோஹ்லி 6, சேவாக் 31, யுவராஜ் 9 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய அணி தடுமாற துவங்கியது. 

இதையடுத்து சென்னையில் இந்திய அணியின் மானத்தை காத்த தோனி - ரெய்னா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணிக்கு வெற்றி தேடித் தரும் என எதிர்பார்த்த நிலையில் ரெய்னா 18 ரன்களுக்கு ஹபீஸ் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆனார். 

இந்திய அணி நூறு ரன்களை எட்டும் முன்னதாக டாப்-5 வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது. அஸ்வின் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தோனி 54 ரன் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார். இந்திய அணி 48 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் பாகிஸ்தான் ஒருநாள் தொ‌டரை 2 க்கு 0 ‌என்ற கணக்கில் வென்றது. 

0 comments:

Post a Comment