பி.சி.சி.ஐ., செய்தது சரியா? - அதிருப்தியில் மும்பை அணி


சர்வீசஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டி, மழையால் தடைபட்டதால், மும்பை அணி அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

மும்பை, சர்வீசஸ் அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி டில்லி பாலம் மைதானத்தில் நடக்கிறது. முதல் ஒன்றரை நாட்கள் மட்டும் நடந்த இப்போட்டியில், மும்பை அணி முதல் இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு 380 ரன்கள் எடுத்திருந்தது. 

இதனிடையே, கடந்த 17ம் தேதி இரவு, புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆடுகளத்தை மூன்று அடுக்கு தார்ப்பாய்களால் மூடியும், பலத்த காற்று வீசியதால் முழுமையாக சேதம் அடைந்தது. 

மைதானத்தில் இருந்த "சைடு ஸ்கிரீன்கள்' கிழிந்து விட்டன. நேற்று முன்தினம் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. மைதானத்தில் நீரை வெளியேற்றும் வசதி சரியாக இல்லாததால், அதிகமாக நீர் தேங்கியது. இதனால், "சூப்பர் சானிக்' எந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 

நேற்றும் ரத்து:

நேற்று காலை நல்ல வெயில் அடித்தது. ஆடுகள பராமரிப்பாளர் தல்ஜித் சிங் உட்பட மற்ற அனைத்து பணியாளர்களும், கடுமையாக முயன்றும் நேற்று ஒருமணி நேரம் கூட போட்டியை நடத்தமுடியவில்லை. இதனால், 3, 4 வது என, இரு நாட்கள் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இதுவரை 143 ஓவர்கள் மட்டும் தான் வீசப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டம் யாருக்கு:

இன்று கடைசி நாளில் இரு அணியின் முதல் இன்னிங்ஸ் முடியவில்லை எனில், புதிய விதிப்படி நாளை வரை (6வது நாள்) போட்டி நீட்டிக்கப்படும். அப்படியும் முடியவில்லை எனில், பைனலுக்கு செல்லும் அணியை "டாஸ்' மூலம் தேர்வு செய்வர். இதனால் 39 முறை சாம்பியன் பட்டம் வென்ற, மும்பை அணி அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

செய்தது சரியா:

அரையிறுதியை மும்பைக்கு மாற்ற வேண்டும் என, போட்டி துவங்கும் சச்சின் விடுத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்க மறுத்தது. 

ஆனால், உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டான பி.சி.சி.ஐ., போட்டியின் முக்கியத்துவத்தின் ("நாக்-அவுட்') அடிப்படையில், அனைத்து வசதிகளும் உள்ள மைதானத்தை முன்னதாக தேர்வு செய்திருந்தால் இப்படிப்பட்ட துரதிருஷ்ட நிலையை தவிர்த்திருக்கலாம்.

0 comments:

Post a Comment