மன்னிப்பு கேட்டார் கோஹ்லி


விதியை மீறி "மீடியாவுக்கு' பேட்டி கொடுத்த செயலுக்காக மன்னிப்பு கேட்டார் இந்திய வீரர் விராத் கோஹ்லி. 

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) விதிப்படி, தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, போட்டியன்று ஏற்பாடு செய்யப்படும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு தவிர, மற்றபடி யாரும் "மீடியாவிடம்' பேசக் கூடாது. கேப்டன் மட்டும் பிற இடங்களில் கருத்துக்களை தெரிவிக்கலாம். 

இவ்விதியை மீறியுள்ளார் விராத் கோஹ்லி. கடந்த 19ம் தேதி, டில்லியில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் இவரது பேட்டி வெளிவந்தது. இதில் இந்திய அணியின் எதிர்காலம் உட்பட பல பிரச்னைகள் குறித்து பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.சி.சி.ஐ.,யின் செல்வாக்கு மிக்க நிர்வாகி ஒருவர், இந்திய அணிக்குரிய பொறுப்பாளருக்கு "இ-மெயில்' அனுப்பினார். இதற்கு பதில் தெரிவித்த அவர், "பி.சி.சி.ஐ., விதிகள் குறித்து வீரர்களிடம் மீண்டும் எடுத்துக் கூறப்படும்,' என, உறுதியளித்தார்.

இதனிடையே, விராத் கோஹ்லி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்த செய்தியில்,"தொடரின் நடுவில் "மீடியாவிடம்' பேசக்கூடாது எனத் தெரியாது. இனி இதுபோன்ற செயல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்,' என, தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment