கிரிக்கெட்டை அழிக்கும் கிரிக்கெட்




இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வில்லாமல் போட்டிகளில் விளையாடுவதால், வீழ்ச்சியை தவிர்க்க முடியவில்லை. வெளிநாடு மற்றும் சொந்தமண் என்ற பாகுபாடு இல்லாமல் தோல்வியடைந்து வருகிறது. 

அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வர, இந்திய கிரிக்கெட் போர்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கடந்த 2011ல் இந்திய அணி சொந்த மண்ணில் உலக கோப்பை வென்றது. இதன் பின் வெஸ்ட் இண்டீசில் வெற்றி கிடைத்தது. அப்படியே இங்கிலாந்து சென்ற இந்திய அணி, டெஸ்ட் (4), ஒருநாள் (4), ஒரு "டுவென்டி-20' என, பங்கேற்ற 9 போட்டிகளிலும் தோற்று "மரண அடி' வாங்கியது. 

இதற்கு பதிலடியாக இந்தியா வந்த இங்கிலாந்து அணியை, 5 ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது இந்திய அணி. பின், சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து என "சாதா' அணிகளை சாய்த்தது. இத்துடன் இந்திய அணியின் வெற்றி முடிந்து போனது.

அடுத்து ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் (0-4), முத்தரப்பு தொடர், ஆசிய கோப்பை, "டுவென்டி-20' உலக கோப்பை, சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர்(1-2), பாகிஸ்தானிடம் ஒருநாள் தொடர்களில்(0-2) தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தானுடனான "டுவென்டி-20' தொடர்களை மட்டும் "டிரா' (1-1) செய்தது. 

அணியில் பிளவு:

கேப்டன் பதவியை குறிவைத்து, வீரர்களுக்கு இடையே மோதல், யார் பெரியவர் என்ற பிரச்னை தான் அணியின் வெற்றியை அதிகமாக பாதிக்கிறது. கேப்டன் தோனி-காம்பிர் மோதல் குறித்து சமீபத்தில் கூட செய்தி வெளியானது. 

பயிற்சியாளரை வெளியேற்று:

பயிற்சியாளராக பிளட்சர் பதவி ஏற்றதில் இருந்தே, இந்திய அணியின் மூக்கு உடைந்து தான் வருகிறது. வலைப்பயிற்சி செய்யும் இடம், "டிரசிங் ரூம்' என, எந்த இடத்திலும் இவருக்கு அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை. இவரை முதலில் வெளியேற்ற வேண்டும்.

 தோனிக்கு "பிரேக்':

மூன்று வித போட்டிகளிலும் கேப்டனாக இருக்கும் தோனியை, குறைந்தபட்சம் டெஸ்டில் இருந்தாவது விடுவிக்க வேண்டும். முந்தைய தேர்வாளர்கள் எதிர்த்த போதும், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் ஆதரவில் தோனி நீடிக்கிறார்.

 இளமைக்கு முன்னுரிமை:

மனோஜ் திவாரி, ரகானே போன்றவர்கள் அணி செல்லுமிடம் எல்லாம் செல்கின்றனர். ஆனால், விளையாடும் லெவனில் மட்டும் வாய்ப்பு வரவில்லை. இவர்களுடன் புஜாராவையும் சேர்த்து எதிர்கால இந்திய அணியை பலப்படுத்தலாம். ஜாகிர் சென்ற பின், இஷாந்த் செயல்பாடு திருப்தியில்லை. உமேஷ் யாதவை பவுலிங் பிரிவுக்கு தலைமையேற்க சொல்லலாம்.

"சுழலில்' கவனம்:

இந்திய அணியின் பலம் சுழற்பந்து வீச்சு தான். கும்ளே ஓய்வுக்குப் பின் இப்போது பெரும் ஆபத்து வந்துள்ளது. இங்கிலாந்து தொடரில் அஷ்வின், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங் என மூவரும் திணறினர். சுழற்பந்து வீச்சு பிரிவில் கவனம் செலுத்தி, திறமையான வீரர்களை கொண்டு வர வேண்டும்.

ஓயாத போட்டிகள்

 அதிக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதால், இந்தியாவில் கிரிக்கெட் அழித்துவிடும் நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதால் தான் பவுலர்களுக்கு காயம் ஏற்படுகிறது. பேட்ஸ்மேன்களும் மனதளவில் சோர்ந்து விடுவதால், களத்தில் போராடாமல் சரணடைகின்றனர். 

 எதிர்காலம் முக்கியம்:

வரும் ஜூனில் சாம்பியன்ஸ் டிராபி, 2015ல் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் உலக கோப்பை தொடர் வருகிறது. "நடப்பு சாம்பியன்' இந்திய அணியின் நலனுக்காக, "விளையாடாத' சீனியர்களான சேவக், காம்பிர் போன்றவர்களை எவ்வித தயக்கமும் இன்றி நீக்க வேண்டும். இளம் ரத்தங்களை சேர்க்க இது தான் சரியான தருணம்.

களத்தில் 200 நாட்கள்...

 கடந்த 2011, நவம்பர் முதல், 2013, ஜன., 4 வரை (15 மாதம்) இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட "டாப்-8' அணிகள் பங்கேற்ற போட்டிகள் ("டுவென்டி-20' உலக கோப்பை தொடர் உட்பட) விவரம்:

அணி டெஸ்ட் ஒருநாள் "டுவென்டி-20' மொத்த நாட்கள்
 ஆஸ்திரேலியா 16 26 15 121
இங்கிலாந்து 15 22 15 112
இந்தியா 13 28 15 108
 இலங்கை 12 36 12 108
தென் ஆப்ரிக்கா 14 16 17 103
பாகிஸ்தான் 11 26 18 99
நியூசிலாந்து 11 19 20 94
வெஸ்ட் இண்டீஸ் 11 26 11 92

* இதில் இந்திய வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஐ.பி.எல்., (60 நாட்கள்) மற்றும் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' (15 நாட்கள்) சேர்த்து சுமார் 200 நாட்கள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

* ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் டெஸ்ட், ஒருநாள், "டுவென்டி-20' போட்டிகளுக்கு முற்றிலும் வெவ்வேறு அணிகளை அனுப்பும். 

* இந்தியாவில் மட்டும் தான்,தோனி உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கும் நிலை உள்ளது.

0 comments:

Post a Comment