யுவராஜ் ஆல்-ரவுண்டராக அசத்தல்


முதலாவது "டுவென்டி-20 போட்டியில் யுவராஜ் சிங் "ஆல்-ரவுண்டராக அசத்த, இந்திய அணி, இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் உள்ள சுப்ரதா ராய் சகாரா மைதானத்தில் நேற்று நடந்தது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங் தேர்வு செய்தார்.

ஹேல்ஸ் அரைசதம்:

 இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் லம்ப் (1) ஏமாற்றினார். பின் இணைந்த அலெக்ஸ் ஹேல்ஸ், லூக் ரைட் ஜோடி ரன் வேட்டை நடத்தியது. டிண்டா வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ஹேல்ஸ், பர்விந்தர் அவானா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின் ஆகியோரது பந்தையும் விட்டுவைக்கவில்லை. 

அபாரமாக ஆடிய ஹேல்ஸ், 26 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த போது, யுவராஜ் "சுழலில் ரைட் (34) அவுட்டானார்.

சுழல் ஜாலம்: 

தொடர்ந்து மிரட்டிய யுவராஜ் வலையில் ஹேல்ஸ் (56), இயான் மார்கன் (5) சிக்க, ரன் வேகம் குறைந்தது. "மிடில்-ஆர்டரில் சமித் படேல், ஜாஸ் பட்லர் ஜோடி நிதானமாக ஆடியது. 

படேல் 24 ரன்களுக்கு அவுட்டானார். டிம் பிரஸ்னன் "டக்-அவுட் ஆனார். அவானா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் பட்லர் அடுத்தடுத்து இரண்டு "சிக்சர் அடிக்க, ஸ்கோர் 150 ரன்களை தாண்டியது.

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. பட்லர் (33), டிரட்வெல் (1) அவுட்டாகாமல் இருந்தனர். 
இந்தியா சார்பில் யுவராஜ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

சூப்பர் துவக்கம்:

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர், ரகானே ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள், அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில் காம்பிர் (16) அவுட்டானார். 

பிரஸ்னன், டெர்ன்பாக் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ரகானே (19) தேவையில்லாத "ஷாட் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

"சிக்சர் யுவராஜ்:

பின் இணைந்த விராத் கோஹ்லி, யுவராஜ் சிங் ஜோடி அபாரமாக ஆடியது. பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய யுவராஜ், டேனி பிரிக்ஸ் வீசிய 8வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது, ரைட் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற யுவராஜ் (38) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கோஹ்லி (21), மீக்கர் பந்தில் போல்டானார்.

தோனி அபாரம்:

"மிடில்-ஆர்டரில் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா அசத்தினர். இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். ரெய்னா (26) "ரன்-அவுட் ஆனார். மீக்கர் பந்தில் தோனி இரண்டு பவுண்டரி அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 17.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (24) அவுட்டாகாமல் இருந்தார்.

 ஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங் வென்றார். இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது "டுவென்டி-20 போட்டி மும்பையில் நாளை நடக்கிறது.

முதல் வெற்றி

புனேயில் உள்ள சுப்ரதா ராய் சகாரா மைதானத்தில் நேற்று முதன் முதலாக சர்வதேச "டுவென்டி-20 போட்டி நடந்தது. இங்கு முதல் வெற்றியை பதிவு செய்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

வீணடித்த ரகானே

இங்கிலாந்து வீரர் பிரஸ்னன் வீசிய 5வது ஓவரின் 4வது பந்தை இந்தியாவின் ரகானே தூக்கி அடிக்க, அதனை மீக்கர் கோட்டைவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய ரகானே (19 ரன்), இந்த ஓவரின் கடைசி பந்தை மீண்டும் தூக்கி அடிக்க, அதனை சமித் படேல் அருமையாக பிடித்தார்.

அவானா அறிமுகம்

இளம் இந்திய மிதவேகப்பந்துவீச்சாளர் பர்விந்தர் அவானா, 26, இங்கிலாந்தின் ஜேம்ஸ் டிரட்வெல், ஸ்டூவர்ட் மீக்கர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். 2 ஓவர் வீசிய அவானா, விக்கெட் வீழ்த்த தவறினார்.

யுவராஜ் பெருந்தன்மை

மனிதநேயமிக்க யுவராஜ் கூறுகையில்,""டில்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட செய்தியை படித்த போது மனதிற்கு வேதனையாக இருந்தது. ஆட்ட நாயகன் விருதை அவருக்கும், அவரது பெற்றோர்க்கும் அர்ப்பணிக்கிறேன். 

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த அணியும் கவலை அடைந்தது. அந்த பெண்ணின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என தெரியாது. ஒட்டுமொத்த இந்தியாவும் அந்த பெண் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கும் என உறுதியாக நம்புகிறேன்,என்றார். 

0 comments:

Post a Comment