இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற 25–ந்தேதி முதல் ஜனவரி 6–ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 

இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்திய தொடர் குறித்து பாகிஸ்தான் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் மிஸ்பா உல்–ஹக் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணியில் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர்களது சொந்த மண்ணிலேயே அதிர்ச்சி அளிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்தியா–பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை எப்போதும் அனைத்து தரப்பினரும் உன்னிப்பாக கவனிப்பார்கள். அப்படிப்பட்ட இந்த தொடரில் தங்களது திறமையை நிரூபித்து, முத்திரை பதிக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது அருமையான வாய்ப்பு. 

இந்த தொடரில் இரு அணிகளுக்கும் நெருக்கடி அதிகமாக இருக்கும். பதற்றமின்றி, நல்ல மனநிலையில் விளையாடும்படி எங்களது வீரர்களுக்கு அறிவுரை வழங்குவேன். 

மூத்த வீரர் அப்துல் ரசாக் நீக்கம் பற்றி கேட்கிறீர்கள். அவரது திறமை குறித்து யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் தேர்வாளர்கள் இந்தியாவில் உள்ள சூழலை மனதில் வைத்து அணியை தேர்வு செய்திருக்கிறார்கள். சீனியர் வீரரை நீக்குவது தொடர்பான எந்த ஒரு விஷயத்திலும், அந்த முடிவுக்கு கேப்டன் மட்டுமே காரணம் அல்ல, அது கூட்டாக எடுக்கப்பட்ட முடிவு என்பதை மக்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் முகமது ஹபீஸ் கூறுகையில், ‘20 ஓவர் போட்டி மற்றும் ஒரு நாள் தொடர் இரண்டிலும் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.

20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி பாகிஸ்தான் அணிகளில் உமர்குல், ஜூனைட் கான், வஹாப் ரியாஸ், முகமது இர்பான், அன்வர் அலி, ஆசாத் அலி, சோகைல் தன்விர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment