பல்வேறு எதிர்ப்புகளை கடந்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. பெங்களூருவில் நடக்கும் முதலாவது "டுவென்டி-20' போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது.
கடந்த 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டித் தொடர் நடக்கவே இல்லை. உலக கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடரில் மட்டும் இரு அணிகளும் மோதின.
மீண்டும் போட்டி:
ஐந்து ஆண்டுகளுக்குப் பின், இப்போது இரண்டு "டுவென்டி-20' மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. முதல் "டுவென்டி-20' இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பின், "டுவென்டி-20' போட்டிகளில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. இப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பதால், சற்று கூடுதல் பொறுப்புடன் விளையாடுவர் என எதிர்பார்க்கலாம்.
இடம் கிடைக்குமா:
விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரெய்னா மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் வழக்கமான ரன்குவிப்பை வெளிப்படுத்த வேண்டும். அதேநேரம் அணியில் புதிதாக இடம் பெற்ற அம்பதி ராயுடுவுக்கு இடம் கிடைக்குமா எனத் தெரியவில்லை.
பேட்டிங்கில் மட்டுமன்றி, "பார்ட் டைம்' பவுலராக அசத்துகிறார் யுவராஜ் சிங். கடந்த இரு போட்டியில் 6 விக்கெட் வீழ்த்திய இவரது அபார "பார்ம்' இன்றும் தொடர்ந்தால் அணிக்கு நல்லது.
பவுலிங் கவலை:
அணியின் பவுலிங் தான் பெரும் கவலையாக உள்ளது. டிண்டா தவிர, அவானா, அஷ்வின், சாவ்லா என, ஒருவருக்கும் விரைவாக விக்கெட் வீழ்த்த தெரியவில்லை போல. ரன்களை மட்டும் வாரி வழங்குகின்றனர். இந்த பலவீனத்தை பாகிஸ்தான் வீரர்கள் பயன்படுத்தினால் சிக்கல் தான். இன்றைய போட்டியில் அபிமன்யு மிதுன் அல்லது புவனேஷ்வர் குமாருக்கு தோனி வாய்ப்பு தருவார் என நம்பலாம்.
புதிய அணி:
"டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்குப் பின், பாகிஸ்தான் அணியில் அகமது ஷெசாத், உமர் அமின், முகமது இர்பான், ஆசாத் அலி, ஜுல்பிகர் பாபர் உட்பட 6 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். தவிர, கேப்டன் முகமது ஹபீஸ், அப்ரிதி, ஜாம்ஷெத், கம்ரான் அக்மல் என, கடைசி வரை போராடக் கூடிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
வலுவான கூட்டணி:
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமர் குல், சோகைல் தன்விர் என, இரு அனுபவ வீரர்கள் பலம் சேர்க்கின்றனர். தவிர, அணியின் சுழற்பந்து வீச்சும் வலுவாக உள்ளது. சயீத் அஜ்மல், அப்ரிதி, கேப்டன் முகமது ஹபிஸ் கூட்டணி எவ்வித பேட்டிங் ஆர்டரையும் சரித்து விடும் பலம் கொண்டது.
மொத்தத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும், பாகிஸ்தான் அணியின் பவுலர்களுக்கும் இடையில் நடக்கும் மோதலாகவே இப்போட்டி பார்க்கப்படுகிறது.
சச்சின் இல்லாமல்...
சச்சின் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தது முதல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்று வந்துள்ளார். இப்போது முதன் முறையாக சச்சின் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.
திருப்பித் தர முடிவு
இந்தியாவுக்கு எதிரான தொடரை பார்வையிட, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விற்க, டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மிகவிரைவில் தொடர் துவங்குவதால் ரசிகர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், முதல் மூன்று போட்டிகளுக்குரிய (2 "டுவென்டி-20', ஒரு ஒருநாள் போட்டி) ரூ. 9 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகளை, இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) திருப்பித் தர, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) முடிவு செய்துள்ளது.
வெடிகுண்டு சோதனை
பெங்களூரு போட்டிக்கு 5000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 100 வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்களுடன் வெடிகுண்டு சோதனை செய்து வருகின்றனர். பெங்களூரு கமிஷனர் மிர்ஜி கூறுகையில்<,"" இரு நாட்டு அரசுகள் தொடருக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் எவ்வித இடையூறும் ஏற்பட விடமாட்டோம்<,'' என்றார்.
தொடரும் அனுமதி மறுப்பு
இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது, கெட்டி, ஆக்ஷன் இமேஜ் நிறுவனங்களை மைதானத்துக்குள் அனுமதிக்க பி.சி.சி.ஐ., மறுத்தது. இதனால், பிற நிறுவனங்கள் தொடரை புறக்கணித்தன. இப்போது, பாகிஸ்தான் தொடரிலும் இது தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
இதுவரை...
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நான்காவது முறையாக சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் மோத உள்ளன. முன்னதாக விளையாடிய மூன்று போட்டியில், 2ல் இந்தியா வெற்றி பெற்றது. ஒரு போட்டி "டை' ஆனது. இதில், "பவுல் அவுட்' முறையில் இந்தியா வென்றது.
* கடந்த 2007ல் டர்பனில் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் முதன்முதலில் மோதின. இப்போட்டி "டை' ஆனது. பின், "பவுல் அவுட்' முறையில் இந்தியா வெற்றி பெற்றது.
* ஜோகனஸ்பர்க் நகரில் 2007ல் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) பைனலில், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, கோப்பை வென்றது.
* கடந்த செப்டம்பர் மாதம், கொழும்புவில் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு பின்
கடந்த 2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் எவ்வித தொடரும் நடத்தப்படவில்லை. ஐ.சி.சி., சார்பில் நடத்தப்படும் உலக கோப்பை உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்கும் தொடரில் மட்டும் மோதின.
ஐந்து ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இவ்விரு அணிகள், இரண்டு அணிகள் மட்டும் பங்கேற்கும் சர்வதேச தொடரில் பங்கேற்கின்றன. கடைசியாக பாகிஸ்தான் அணி 2007ல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தது. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) அரையிறுதியில் விளையாட பாகிஸ்தான் அணி, இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.
157
ஜோகனஸ்பர்க் நகரில் 2007ல் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) பைனலில், முதலில் பேட் செய்த இந்திய அணி 157 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் "டுவென்டி-20' அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* இப்போட்டியில் 152 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.
128
கொழும்புவில், கடந்த செப்டம்பர் மாதம் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் 128 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 2007ல் டர்பனில் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்த இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது.
கோஹ்லி "78'
"டுவென்டி-20' போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி (78 ரன்கள்) முதலிடம் வகிக்கிறார். இவரை அடுத்து காம்பிர் (78), ராபின் உத்தப்பா (58) ஆகியோர் உள்ளனர்.
* இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர்கள் வரிசையில் மிஸ்பா (96 ரன்கள்) முன்னிலையில் உள்ளார். இவரை அடுத்து சோயப் மாலிக் (56), இம்ரான் நசிர் (48) ஆகியோர் உள்ளனர்.
இர்பான் "6'
"டுவென்டி-20' அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில் இர்பான் பதான் (6 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து ஆர்.பி. சிங் (4), பாலாஜி (3) ஆகியோர் உள்ளனர்.
* இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் பவுலர்கள் வரிசையில் முகமது ஆசிப் (5 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். இவரை அடுத்து உமர் குல் (3), அப்ரிதி (3) உள்ளனர்.
எப்படியோ போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என நினைக்கிறேன்
ReplyDelete