இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கான நேரம் மாற்றம்


இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் நான்கு ஒருநாள் போட்டிகள் துவங்கும் நேரத்தை பி.சி.சி.ஐ., மாற்றியது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி, அடுத்த ஆண்டு ஜன. 11ம் தேதி ராஜ்கோட்டில் நடக்கவுள்ளது. 

பின், கொச்சி (ஜன. 15), ராஞ்சி (ஜன. 19), மொகாலி (ஜன. 23), தர்மசாலா (ஜன. 27) ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளது. முதல் நான்கு போட்டிகள் பகலிரவு போட்டியாகவும், கடைசி போட்டி பகல் போட்டியாகவும் நடத்தப்படுகிறது.

வழக்கமாக, இந்தியாவில் பகலிரவு போட்டிகள் மதியம் 2.30 மணிக்கு துவங்கப்படும். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், பகலிரவு போட்டிகள் மதியம் 12 மணிக்கு துவங்கும் என பி.சி.சி.ஐ., நேற்று அறிவித்தது. 

இப்போட்டிகள் இரவு 7.45 மணிக்கு முடிவடையும். தர்மசாலாவில் நடக்கவுள்ள கடைசி போட்டி திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு துவங்கும்.

பொதுவாக பனிப்பொழிவு காலங்களில் நடக்கும் பகலிரவு போட்டிகளில் "டாஸ்' வெல்லும் அணி, "பீல்டிங்' தேர்வு செய்யும். ஏனெனில் இரண்டாவதாக பவுலிங் செய்யும் அணியின் பவுலர்களுக்கு, பந்தை பிடித்து வீசுவதற்கு சிரமமாக இருக்கும். 

இதனை தவிர்ப்பதற்காக போட்டி துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் எவ்வித பிரச்னையும் இருக்காது.

0 comments:

Post a Comment