ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டு ஏப்., 3ம் தேதி கோல்கட்டாவில் ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் "நடப்பு சாம்பியன் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டு தோறும் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
அடுத்த ஆண்டுக்கான 6வது ஐ.பி.எல்., தொடர், ஏப். 3ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. ஏப். 3ம் தேதி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் "நடப்பு சாம்பியன் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் போல, "ரவுண்டு ராபின் மற்றும் "பிளே ஆப் தகுதிச் சுற்றுகள் நடத்தப்படுகிறது. "ரவுண்டு ராபின் சுற்றில் ஒரு அணி, மற்ற 8 அணிகளுடன் தலா 2 முறை லீக் போட்டியில் மோதும். இச்சுற்றின் கடைசி போட்டி அடுத்த ஆண்டு மே 19ம் தேதி நடக்கவுள்ளது.
முடிவில், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் "பிளே-ஆப் தகுதிச் சுற்றுக்கு (3 போட்டிகள்) தகுதி பெறும். மொத்தம் 72 லீக் போட்டிகள், 3 "பிளே-ஆப் தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஒரு பைனல் உட்பட மொத்தம் 76 போட்டிகள் நடக்கவுள்ளன.
முதலிரண்டு "பிளே-ஆப் சுற்றுப் போட்டிகள் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த ஆண்டு மே 21, 22ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. மூன்றாவது "பிளே-ஆப் மற்றும் பைனல், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், அடுத்த ஆண்டு மே 24, 26ம் தேதிகளில் நடக்கவுள்ளது.
இதுகுறித்து ஐ.பி.எல்., தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ""இதுவரை நடந்த ஐந்து ஐ.பி.எல்., தொடர்கள் போல, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 6வது ஐ.பி.எல்., தொடர் வெற்றிகரமாக நடக்கும் என நம்புகிறோம்.
உலகின் தலைசிறந்த முன்னணி வீரர்கள் பங்கேற்பதால், இத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, என்றார்.
0 comments:
Post a Comment