ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் சச்சின்


இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீரர் சச்சின் ஓய்வு பெற்றார். 

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த 1973ல் மும்பையில் பிறந்தார். 1989ம் ஆண்டு, 16 வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 

கடந்த 23 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்த சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 34,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். 

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில்  இரட்டைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை உட்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவர், இதுவரை 463 ஒருநாள் போட்டிகளில் 49 சதம் உட்பட 18,426 ரன்கள் எடுத்துள்ளார். 194 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 51 சதம், 66 அரைசதம் உட்பட 15, 645 ரன்கள் குவித்துள்ளார். 

வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரில் சதத்தில் சதம் அடித்தார்.  சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான "ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா விருதை பெற்றார். இவர் இந்தியாவின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா மற்றும் பத்ம விபூசன் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். 

கடந்த 2006க்கு பின் "டுவென்டி-20 போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அதன் பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்ற இவர், சமீப காலமாக "பார்ம் இல்லாமல் தவித்து வந்தார். 

தற்போது இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, 2 "டுவென்டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றவுள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் தற்போது இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இது குறித்து சச்சின் கூறியது:

உலக கோப்பை வெல்லும் அணியில் இடம் பெற வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியதால் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். 

2015ல் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு விரைவில் துவங்கவுள்ளது. இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தான் இந்த முடிவை எடுத்தேன். 

இதுவரை எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் கிரிக்கெட் தேர்வுக்குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் சிறப்பான எதிர்காலத்திற்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

0 comments:

Post a Comment