கேப்டன் தோனிக்கு ஓய்வு


கேப்டனாக தோனிக்கு ஓய்வு கொடுக்கலாம். இவருக்கு பதிலாக விராத் கோஹ்லியை புதிய கேப்டனாக நியமிக்கலாம் என,'' இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்தார்.

சமீப காலமாக தோனியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. இவரது தலைமையில் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து கவாஸ்கர் கூறியது:

டெஸ்ட், ஒருநாள் போட்டி, "டுவென்டி-20' என மூன்றுவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டனாக தோனிக்கு ஒரு சிறிய "பிரேக்' அளிக்கலாம். 

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் நடக்கும் நிலையில், இதனை அமல்படுத்த முடியாது. அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலிய தொடர் அல்லது 2013ன் பிற்பகுதியில் தோனிக்கு ஓய்வு தரலாம். 

இதன் மூலம் இவர், தனது செயல்பாடு குறித்து மதிப்பீடு செய்து, சிறப்பான முறையில் மீண்டு வரலாம்.

தோனிக்கு பதிலாக நீண்ட கால அடிப்படையில் விராத் கோஹ்லியை புதிய கேப்டனாக நியமிக்கலாம். இவர், "டைகர்' பட்டோடியை போன்று மிகச் சிறப்பாக செயல்படுவார். 

கேப்டன் பதவிக்கான ஆக்ரோஷம், ஆற்றல், கம்பீரம், உயர்ந்த தரம் ஆகிய அனைத்தும் இவரிடம் உள்ளது. தோனி "மேட்ச் வின்னர்' என்பதால், சாதாரண வீரராக குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை அணியில் நீடிக்கலாம். 

ஆஸ்திரேலிய தொடருக்கு பின் பயிற்சியாளர் பிளட்சரின் ஒப்பந்தம் நீடிக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில், புதிய பயிற்சியாளராக இந்தியர் ஒருவர் அல்லது கேரி கிறிஸ்டன் போன்ற திறமையானவரை நியமிக்கலாம். 

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

0 comments:

Post a Comment