தோனி நீடிப்பது ஏன்? அமர்நாத் திடுக் தகவல்


டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க முயற்சிகள் நடந்தது உண்மை தான்,'' என, இந்திய அணியின் முன்னாள் வீரர் மொகிந்தர் அமர்நாத் தெரிவித்தார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக விளங்குபவர் தோனி, 31. இவரது தலைமையில் இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை (2007), 50 ஓவர் உலக கோப்பை (2012) மற்றும் டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடம் என வெற்றி மேல் வெற்றிகளை குவித்தது. கடந்த ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 8 டெஸ்டில் இந்திய அணி தோற்றது. 

இதையடுத்து அணியின் கேப்டன் தோனியை நீக்க வேண்டும் என, அப்போதைய தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்த, அமர்நாத் தெரிவித்தார். தேர்வுக்குழுத் தலைவராக வர வாய்ப்பிருந்த நிலையில், தோனியை எதிர்த்தார் என்பதற்காக, கடைசியில் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தோல்விகளை சந்திக்கிறது. 

இதனிடையே, தோனி குறித்து அமர்நாத் கூறியது:

இந்திய அரசியலும், கிரிக்கெட்டும் ஒன்று தான். ஒரு சிலர் போட்டியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர். இதனால், மற்றவர்கள் பொறுப்புக்கு வர பயப்படுவர். 

தொடர்ச்சியான தோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க, அப்போது முயற்சிகள் நடந்தது உண்மைதான். இதற்கு தேர்வுக்குழுவினர் ஆதரவு தெரிவித்தனர். கடைசியில் சில உள் விவகாரத்தால், அது முடியாமல் போனது. இந்த காரணங்களை இப்போது வெளியில் கூற விரும்பவில்லை. ஆனால், சரியான நேரம் வரும் போது, இந்த நாட்டு மக்களுக்கு அதை வெளிப்படுத்துவேன். 

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என நம்புகிறேன். இரண்டு உலக கோப்பை பெற்றுத் தந்ததை விட, டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்தார். கேப்டனாக இருப்பதால் தான், அணியில் இவருக்கு இடம் கிடைக்கிறது. இவரை அணியில் இருந்து நீக்க, தேர்வுக் குழுவினருக்கு துணிச்சல் இல்லை. 

தோனியால் தான், திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு, வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் தோனிக்கு எதிரானவன் அல்ல. இந்திய அணியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்பதால், மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

இரண்டு கேப்டன்: 

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கு தனி கேப்டன்களை நியமிப்பது நல்லது. ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளுக்கு விராத் கோஹ்லி, டெஸ்ட் போட்டிக்கு கவுதம் காம்பிரை கேப்டனாக நியமிக்கலாம். சோபிக்காத வீரர்களை நீக்கிவிட்டு, திறமையான இளம் வீரர்களை சேர்க்க வேண்டும். 

தகுதியற்ற வீரர்கள்: 

தற்போது அணியில் உள்ள சில வீரர்கள் உடற்தகுதி இல்லாமல் உள்ளனர். மாற்று வீரர் இல்லாததால், தொடர்ந்து போட்டியில் விளையாடுகின்றனர். "பார்ம்', உடற்தகுதி இல்லாத வீரர்கள் தாமாகவே முன்வந்து ஓய்வு எடுக்க வேண்டும். உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்து மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டும். இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்.

மீண்டும் இடம்: 

அடுத்த ஆண்டு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற முன்னணி அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளோம். ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் திறமையை நிரூபித்து, மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டும். 

சச்சின் சிறந்த வீரர். இவர், நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார். தற்போது "பார்மின்றி' தவிக்கும் இவரால், சிறப்பாக செயல்பட முடியவில்லை. விரைவில், "பார்மை' மீட்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு அமர்நாத் கூறினார்.

0 comments:

Post a Comment