டெஸ்ட் போட்டி மீதான ஆர்வம் இந்திய வீரர்களுக்கு சுத்தமாக இல்லை. பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடருக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
கேப்டன் பதவியை பிடிக்க மோதல், அணியில் ஒற்றுமையின்மை, தவறான வீரர்கள் தேர்வு போன்றவை அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், இந்திய அணியால் மட்டும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிவதில்லை.
முன்பு வெளிநாடுகளில் தோல்வி அடைவது வாடிக்கையாக இருந்தது. தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் முக்கிய காரணம். இதன் மூலம் கோடிகள் கிடைப்பதால், கிரிக்கெட் வீரர்கள் பகட்டான வாழ்க்கைக்கு மாறி விட்டனர்.
ஒரு டெஸ்டில் விளையாடினால் ஒரு வீரருக்கு ரூ.7 லட்சம் தான் சம்பளம் கிடைக்கும். தவிர, 5 நாட்கள் களத்தில் கடுமையாக பாடுபட வேண்டும். இத்தகைய சிரமங்களை தற்போதைய வீரர்கள் எதிர்கொள்ள தயாராக இல்லை.
டெஸ்ட் போட்டிகளில் தோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பிடிக்க காம்பிர், சேவக் முயற்சிக்கின்றனர். இப்படி பதவி போட்டி அதிகரித்தது, அணியின் நலனை பெரிதும் பாதித்தது. இது வீரர்கள் இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தியது.
இந்திய தேர்வுக்குழுவினரும் தைரியம் இல்லாதவர்களாக உள்ளனர். பழம்பெருமைக்கு முக்கியத்துவம் அளித்து விளையாடாத வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கின்றனர்.
உதாரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய நான்கு டெஸ்டில் சச்சின் சராசரியாக 18.66 ரன்கள் தான் எடுத்தார். ஆனாலும், இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது.
டெஸ்ட் போட்டிக்கு எழுச்சி அளிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் போர்டு விரைவில் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள தொடரிலாவது சாதிக்க முடியும்.
0 comments:
Post a Comment