இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் "டுவென்டி-20' போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற, ரசிகர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரூ. 300 மதிப்புள்ள டிக்கெட், கள்ளச்சந்தையில் ரூ. 2,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி, நாளை ஆமதாபாத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் இரு அணி வீரர்கள் நேற்று ஆமதாபாத் வந்து சேர்ந்தனர். இதனிடையே, இப்போட்டியை காண, ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
நேற்று டிக்கெட்டுகளை பெற மைதான நுழைவு வாயிலில் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். டிக்கெட் பெறுவதில் இவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, போலீசார் தடியடி நடத்த வேண்டியதாயிற்று.
இதற்கிடையே, கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை அமோகமாக நடக்கிறது. இப்போட்டிக்கு ரூ. 300 மதிப்புள்ள டிக்கெட்டின் ஒன்றின் விலை, ரூ. 2,500 வரை விற்கப்படுகிறது. இதனால், சாமான்ய ரசிகர்கள் போட்டியை காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அஷ்வின் இல்லாதது சாதகம்
பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ஹபீஸ் கூறியது:
பெங்களூருவில் நடந்த முதல் "டுவென்டி-20' போட்டியில் அஷ்வினை நீக்கி விட்டு, ரவிந்திர ஜடேஜாவை சேர்த்தது வியப்பாக இருந்தது. இதைத் தான் நாங்கள் விரும்பினோம்.
ஏனெனில், ரவிந்திர ஜடேஜா பந்துகளை ஏற்கனவே சந்தித்துள்ளோம். இதனால், புதிய பந்தில் சில ஓவர்கள் முடிந்து விட்டால் போதும். பின், இந்திய அணியில் உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் கிடையாது.
அப்புறம் எளிதாக சமாளிக்கலாம் என திட்டமிட்டோம். தவிர, யுவராஜ் சிங் குறித்து எங்களுக்குத் தெரியும். இவர் "பார்மில்' உள்ளார். அதேநேரம், அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாத நிலையில், யாரையும் எளிதாக சமாளிக்கலாம்.
இவ்வாறு முகமது ஹபீஸ் கூறினார்.
0 comments:
Post a Comment