காசு வந்தது, இந்திய வீரர்கள் ஆட்டம் போனது


கோல்கட்டா டெஸ்டில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் "சரணடைந்த' இந்திய வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் டிராவிட்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தற்போது நடக்கிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவில், இந்திய அணி 1-2 என, பின்தங்கியுள்ளது. சொந்தமண்ணில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய அணி முன்னாள் வீரர் டிராவிட் கூறியது:

மும்பை டெஸ்டில் வீழ்ந்த இந்திய அணி, கோல்கட்டாவில் எதிர்ப்பு இன்றி சரணடைந்தது. வீரர்களின் திறமை குறித்து மக்கள் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர். அவர்களுக்கு இதெல்லாம் குறித்து கவலையில்லை. ஐ.பி.எல்., தொடர் மூலம் அதிகளவு வருமானம் கிடைக்கிறது என பேசத் துவங்கி விட்டனர். உண்மையில் வீரர்களிடம் திறமை ஆற்றல் இல்லை. இது தான் எனது பெரிய கவலையாக உள்ளது. 


மாற்றம் வருமா: 

இதற்கு முக்கிய காரணம், உள்ளூர் போட்டிகளின் தரம் போதியளவு இல்லை. சர்வதேச கிரிக்கெட்டுக்கு வரும் போது அவர்களால் சிறப்பாக ஜொலிக்க முடியவில்லை.

"ஏ' அணிகளை அதிகமாக வெளிநாடு அனுப்ப வேண்டும். அகாடமி முறையை கொண்டு வர வேண்டும். 

இங்கிலாந்து அணியின் அகாடமி அணிகள், ஒவ்வொரு குளிர் காலத்திலும், பல நாடுகளுக்கு சென்று விளையாடுகின்றனர். இது தான் அந்த அணியின் வெற்றிக்கு காரணம். 

எதிர்ப்பு இல்லை: 

இந்திய அணியின் சமீபத்திய தோல்வி பலரையும் வெறுப்படையச் செய்துள்ளது. தோற்ற விதம் அப்படி. மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தான் "டாஸ்' வென்றது. மும்பை, இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருந்தது. கோல்கட்டா பேட்டிங்கிற்கு உதவியது. அப்படி இருந்தும் இந்திய வீரர்கள் சிறிதளவு கூட போராடவில்லை. 

ஏமாற்றிய "சுழல்': 

நமது பலம், சுழற் பந்து வீச்சு தான். அஷ்வின், பிரக்யான் ஓஜா இணைந்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. பீல்டிங்கிலும் இந்திய அணி மோசமாக உள்ளது. வீரர்களின் உடற் தகுதி ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது. இதற்கு மன்னிப்பே கிடையாது. பீல்டிங்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

 சச்சின், கங்குலி, கும்ளே, சேவக் இணைந்திருந்த போது, பல்வேறு வெற்றிகளை பெற்றது. கங்குலி, கும்ளே ஓய்வுக்குப் பின், இது போன்ற வீரர்கள் கொண்ட அணியாக மாற்றும் முயற்சி இப்போது நடக்கிறது. இதற்கு, திறமை, நுட்பம், டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற இயற்கையான விருப்பம் உள்ளவர்களை சேர்க்க வேண்டும். 

பாடம் கற்குமா: 

அடுத்து நாக்பூரில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஒருவேளை தொடர்ந்து வெற்றிகள் பெற்று, மீண்டும் "நம்பர்-1' இடத்தை அடைய விரும்பினால், இத்தொடரின் மூலம் இந்திய அணி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 
இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment