தோனியின் நீக்கத்தை தடுத்தது யார்?


தேர்வுக்குழுவின் முடிவில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் தலையிட்டதால் தான், தோனியின் கேப்டன் பதவி நீடிக்கிறது,'' என, முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் மொகிந்தர் அமர்நாத் உண்மையை போட்டு உடைத்தார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக விளங்கியவர் தோனி, 31. இவரது தலைமையில் வெற்றிகளை குவித்த இந்திய அணி, சமீப காலமாக தடுமாறுகிறது. தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு ஆதரவு அளித்த முன்னாள் இந்திய வீரர் அமர்நாத், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்,""கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்த போது, தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முயற்சிகள் நடந்தன. 

இதற்கு தேர்வுக்குழுவினரும் ஆதரவு தெரிவித்தனர். கடைசியில், சில உள் விவகாரத்தால், அது முடியாமல் போனது. இக்காரணத்தை தற்போது வெளியே கூற விரும்பவில்லை. சரியான நேரம் வரும் போது வெளிப்படுத்துவேன்,'' என்றார்.

தற்போது உண்மையை போட்டு உடைத்த அமர்நாத் கூறியது: டெஸ்ட் போட்டிகளில் கண்ட தொடர் தோல்விக்கு பின், கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க தேர்வுக்குழுவினர் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்தோம். ஆனால் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் அனுமதி அளிக்காததால், அது தடைபட்டது. 

தனிநபர் மட்டுமே எடுக்கும் இறுதி முடிவுக்கு, தேர்வுக்குழு தேவையில்லை. பி.சி.சி.ஐ.,யின் சட்ட விதிமுறைகள் எனக்கு புரியவில்லை. இது, தற்போதுள்ள தேர்வுக்குழுவினருக்கு தெரியுமா எனவும் தெரியவில்லை.

அப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கு, 17 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தோம். கேப்டன் யார் என்பதை ஒரு தனிநபர் மட்டுமே முடிவு செய்தார். இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முத்தரப்பு தொடருக்கு இளம் வீரரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்தோம். அது நடக்கவில்லை.

ஐ.பி.எல்., தொடரில், சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கேப்டனாக இருப்பதால் தான், சர்வதேச போட்டிகளுக்கும் கேப்டனாக நீடிக்கிறார் எனக் கூற முடியாது. இது தனிப்பட்ட விஷயம். இதுகுறித்து கருத்து கூற கூடாது.

இவ்வாறு அமர்நாத் கூறினார்.

பி.சி.சி.ஐ., மறுப்பு

அமர்நாத் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில், ""அணித் தேர்வில் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர் தலையீடு இருப்பது உண்மைக்கு புறம்பானது. அமர்நாத் கூறியதை ஏற்க முடியாது. அவர் கூறிய கருத்துக்கு, அப்போதைய தேர்வுக்குழுவில் இருந்த யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை,'' என்றார்.

இது சரியான நேரமல்ல

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,"" இப்போதைய நிலையில், தோனிக்கு சரியான மாற்று வீரர் யாரும் இல்லை. இவரும், விராத் கோஹ்லியும் மைதானத்தில் சோர்வாக காணப்படுகின்றனர். ஆனாலும், தோனி பல "கேட்ச்'களை பிடித்தார். 

இவரை, கேப்டன் பதவியில் இருந்து, நீக்க இது சரியான நேரம் இல்லை. அணியை தேர்வு செய்யும், இறுதி முடிவு இந்திய கிரிக்கெட் போர்டுக்குத்தான் (பி.சி.சி.ஐ.,) உள்ளது,'' என்றார்.

0 comments:

Post a Comment