இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐ.ஒ.ஏ.,), தடை விதிக்கப்பட்டது, ஒலிம்பிக் வரலாற்றில் கறுப்பு நாள், என, ஐ.ஒ.ஏ., முன்னாள் துணைத்தலைவர் ஜெகதீஷ் டைட்லர் தெரிவித்தார்.
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) விதிகளின் படி தேர்தல் நடத்தாமல், மத்திய அரசின் புதிய விளையாட்டு விதிகளின் படி ஐ.ஒ.ஏ., தேர்தல் நடத்த முன் வந்தது. காமன்வெல்த் ஊழலில் சிக்கி, சிறை சென்ற லலித் பனோட், பொதுச்செயலராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கோபமடைந்த ஐ.ஒ.சி., ஐ.ஒ.ஏ.,வுக்கு, தற்காலிக தடை விதித்தது. ஜெகதீஷ் டைட்லர் கூறியது:
தேர்தல் குறித்து பலமுறை ஐ.ஒ.சி., எச்சரித்தது. எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் ஐ.ஒ.ஏ., நிர்வாகிகள் செயல்பட்டனர்.
ஒலிம்பிக் நன்னடத்தை விதிகளின் படி, சிலர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தெளிவாகக் கூறப்பட்டது. ஆனால், இதற்கு எதிராகவே செயல்பட்டனர்.
கடைசியில், ஐ.ஒ.சி., தடை விதித்து விட்டது. இது இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் கறுப்பு நாள். இந்த நிலை ஏற்படும் என முன்பே தெரிவித்தோம். அதனால் தான் என்னைப் போன்ற சிலர் தேர்தலில் இருந்து விலகினோம்.
ஏனெனில், அவமானகரமான இந்த விஷயத்தில் பங்கேற்க விரும்பவில்லை.
ஐ.ஒ.ஏ., ஊழலற்ற அமைப்பாக உருவாக வேண்டும். இப்போதுள்ள நிர்வாகிகள் யாரும் இதற்கு பொறுப்பேற்பதாக தெரியவில்லை.
விளையாட்டை விரும்பும் நிர்வாகிகள், வீரர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு ஐ.ஒ.ஏ.,வை மீட்க வேண்டும்.
இவ்வாறு ஜெகதீஷ் டைட்லர் கூறினார்.
0 comments:
Post a Comment