இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் அடித்து அசத்திய கேப்டன் தோனியின் போராட்டம் வீணானது.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்துவரும் மழை காரணமாக, மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதனால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. "டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, "பீல்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சேவக் (4), காம்பிர் (8) ஏமாற்றினர். அடுத்து வந்த விராத் கோஹ்லி (0), யுவராஜ் சிங் (2), ரோகித் சர்மா (4) நிலைக்கவில்லை. இதனால் இந்திய அணி 9.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 29 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது.
இந்நிலையில் இணைந்த கேப்டன் தோனி, ரெய்னா ஜோடி பொறுப்பாக ஆடியது. அணியை விக்கெட் சரிவிலிருந்து மீட்ட இவர்கள் நிதானமாக ரன் சேர்த்தனர். ரெய்னா (43) ஆறுதல் தந்தார்.
அபாரமாக ஆடிய கேப்டன் தோனி, சதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. தோனி (113), அஷ்வின் (31) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஜுனைய்டு கான் 4, முகமது இர்பான், முகமது ஹபீஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (0), அசார் அலி (9) ஏமாற்றினர். அடுத்து வந்த யூனிஸ் கான் (58) நம்பிக்கை தந்தார். கேப்டன் மிஸ்பா (16) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஜாம்ஷெத், சதம் அடித்தார்.
பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 2, இஷாந்த், டிண்டா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை இந்திய கேப்டன் தோனி பெற்றார்.
இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி ஜன. 3ம் தேதி கோல்கட்டாவில் நடக்கவுள்ளது.
0 comments:
Post a Comment