அம்பயர் டேவிட் ஷெப்பர்ட் மரணம்

கிரிக்கெட் அரங்கின் மிகச் சிறந்த அம்பயராக விளங்கிய டேவிட் ஷெப்பர்ட்(68) மரணம் அடைந்தார்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட் ஷெப்பர்ட். கடந்த 1965ல் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், கிளவுசஸ்டர்ஷயர் கவுன்டி அணிக்காக விளையாடினார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1979ல் விடைபெற்ற இவர், 1983ல் உலக கோப்பை போட்டியில் அம்பயராக அறிமுகமானார். தொடர்ந்து மூன்று உலக கோப்பை பைனல்களில்(1996, 1999, 2003) அம்பயராக பணியாற்றி சாதனை படைத்தார்.

கடந்த 2005ல் ஓய்வு பெற்ற இவர், 172 ஒரு நாள் மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளில் அம்பயராக பணியாற்றியுள்ளார். களத்தில் வீரர்களுடன் சகஜமாக பழகும் இவர், மிகவும் ஜாலியான மனிதர். "ஷெப்' என செல்லமாக அழைக்கப்பட்ட இவர், சரியான தீர்ப்புகளை வழங்கி ரசிகர்களின் இதயம் கவர்ந்தவராக திகழ்ந்தார். கிரிக்கெட்டில் "111' என்ற ஸ்கோர் ராசியில்லாததாக கருதப்படும். இந்த ஸ்கோர் வரும் போதெல்லாம் தனது ஒரு காலை உயர்த்தி வித்தியாசமாக தாவுவது ஷெப்பர்ட்டின் வழக்கமாக இருந்தது.

கடந்த 2005ல் ஜமைக்காவில் தனது கடைசி டெஸ்டில் பங்கேற்றார் ஷெப்பர்ட். அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இவரை கட்டி அணைத்து பிரியாவிடை கொடுத்தனர். பின்னர் லாரா,"" தங்களது சேவைக்கு நன்றி,'' என கையெழுத்திட்ட பேட் ஒன்றை இவருக்கு பரிசாக அளித்து கவுரவித்தார்.

நீண்ட நாட்களாக நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ஷெப்பர்ட் நேற்று முன் தினம் இரவு மரணமடைந்தார். இவருக்கு ஜெனி என்ற மனைவி உள்ளார். இவரது திடீர் மரணத்தால் கிரிக்கெட் உலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் தங்களது இரங்கலை வெளியிட்டுள்ளனர். சக நாட்டு அம்பயரான டிக்கி பேர்ட் கூறுகையில்,""ஷெப்பர்ட் எனது நல்ல நண்பர். இவரது மரணம் தனிப்பட்ட முறையில் மிகுந்த கவலை அளிக்கிறது. இவருடன் இணைந்து அம்பயராக பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்,''என்றார்.

ஐ.சி.சி., இரங்கல்:
ஷெப்பர்ட் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) இரங்கல் தெரிவித்துள்ளது. ஐ.சி.சி., தலைவர் டேவிட் மார்கன் கூறுகையில்,""சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் அம்பயராக விளங்கினார் ஷெப்பர்ட். வீரர்கள், ரசிகர்கள், நிர்வாகிகள் என அனைவராலும் நேசிக்கப்பட்டார். அம்பயர் பணியை மிகவும் "சீரியசாக' எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார். இவரது மரணம் கிரிக்கெட்டுக்கு மிகப் பெரும் இழப்பு,''என்றார்

0 comments:

Post a Comment