இந்திய மண்ணில் வெல்வது கடினம்

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில், அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது,'' என, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் ஏழு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் போட்டி வரும் 25ம் தேதி வதோதராவில் நடக்க உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் கூறியது:

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் தோல்வியடையச் செய்வது என்பது எப்போதும் மிகவும் கடினம். வெளிநாட்டு தொடர்களின் போது விளையாடுவதை விட, தோனி தலைமையிலான இந்திய வீரர்கள், உள்ளூரில் உறுதியாக, சிறப்பாக விளையாடுவார்கள்.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. நமக்கு எதிரான தொடருக்காக அணியில் பல மாற்றங்களை அவர்கள் செய்துள்ளார்கள்.


துரத்தும் காயம்:

அணியின் இளம் வீரர் பெர்குசன், நாதன் பிராக்கன் போன்ற வீரர்கள் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. துணைக்கேப்டன் மைக்கேல் கிளார்க்கும், காயம் குணமடைந்து தொடரின் பின்பகுதியில் தான் அணியில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நானும், தேர்வுக்குழுவினரும் இணைந்து அடுத்த சில நாட்களில் பேட்டிங் ஆர்டர் குறித்து முடிவு செய்யஉள்ளோம்.



மார்ஷ் வருகை:

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஷான் மார்ஷ், ஆஸ்திரேலிய அணியின் சிறந்த "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேனாக இருந்தார். டிம் பெய்னேவுடன் சேர்ந்து இப்போது ஷான் மார்சும் அணிக்கு திரும்புவதால், சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

எப்படி இருப்பினும் ஆஸ்திரேலிய அணி சிறந்த பேட்டிங் வீரர்களை கொண்டுள்ளது. முதல் போட்டி துவங்கும் நாளன்று, எப்படியும் சரியான அணியுடன் களமிறங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார்.



ஹர்பஜன் நம்பிக்கை:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் கூறியது:

மெக்ராத், வார்ன் மற்றும் ஹைடன் போன்ற சீனியர் வீரர்களின் ஓய்வுக்கு பின்பு ஆஸ்திரேலிய அணி, மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. அவர்கள் எப்போதும் கடினமானவர்கள்தான். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, இந்தியாவில் வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர்.

ஆனால் நமது அணி சிறப்பாக விளையாடுவதால் எந்த அணியையும், தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.


ஆர்வம் வேண்டும்:

இந்திய அணியின் ஆடையை அணியும் போதெல்லாம், நான் விரைவில் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். பொதுவாக எந்தவித ஆர்வமும் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் லட்சியங்களை அடைய முடியாது. இதில் நான் மிகுந்த ஆர்வமுள்ளவன். உலகின் சிறந்த அணிக்கு எதிராக அசத்தலான திறமையை வெளிப்படுத்த தயாராக உள்ளேன்.


வழிகாட்டியாக உள்ளேன்:

இளம் வீரர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஏனெனில் நானும் ஆரம்பகாலங்களில் தவறுகள் செய்தவன் தான். என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு சீனியர் வீரரும் பொறுப்பாக செயல்பட வேண்டும் என நினைப்பவன். நானும் அதைத்தான் செய்கிறேன்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்

0 comments:

Post a Comment