சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஈகிள்ஸ், இங்கிலாந்தின் சசக்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும் என்பதால், விறுவிறுப்பான போட்டியை காணலாம்.
சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து, உள்ளூர் "டுவென்டி-20' அணிகள் பங்கேற்கின்றன. டில்லியில் இன்று நடக்கும் "பி' பிரிவு கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஈகிள்ஸ் அணி, இங்கிலாந்தின் சசக்ஸ் அணியை சந்திக்கிறது. இப்பிரிவில் இடம் பெற்றுள்ள மற்றொரு அணியான, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணி, இரண்டு லீக் போட்டியிலும் வெற்றி பெற்று, "சூப்பர்-8' சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, நியூ சவுத் வேல்ஸ் அணியுடன் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும்.
சாதிப்பாரா சாவ்லா?:
நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், சசக்ஸ் அணியின் பேட்டிங், பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்த அணியில் பியுஸ் சாவ்லா, டுவைன் ஸ்மித், லுக் ரைட், யாசர் அராபத் உள்ளிட்ட சர்வதேச போட்டியில் விளையாடி அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும், முதல் போட்டியில் இவர்கள் யாரும் பெரிய அளவில் சாதிக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதில் இந்திய வீரர் பியுஸ் சாவ்லா ஒரு விக்கெட் கைப்பற்றி ஆறுதல் அளித்தார். ஆனால், பேட்டிங்கில் "டக்-அவுட்டாகி' ஏமாற்றினார். சொந்த மண்ணில் விளையாடும் இவர், இன்றைய போட்டியில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கிறிஸ் நாஷ், ஹாமில்டன்-பிரவுன் என இளம் வீரர்கள் ஓரளவு கைகொடுத்ததால், கவுரவமான ஸ்கோரை பெற முடிந்தது. இன்றைய போட்டியில் சசக்ஸ் அணி பேட்டிங், பவுலிங்கில் முழுதிறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
கைகொடுப்பாரா வான் விக்?:
நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், ஈகிள்ஸ் அணியின் பேட்டிங், பவுலிங் படுமந்தமாக இருந்தது தோல்விக்கு முக்கியபங்கு வகித்தது. இந்த அணியில் மோர்னே வான் விக் மட்டும் ஓரளவு சர்வதேச போட்டியில் விளையாடி அனுபவம் பெற்றவர். மற்ற வீரர்கள் அனைவரும் உள்ளூர் மற்றும் முதல்தர போட்டியில் விளையாடி அனுபவம் பெற்றுள்ளனர். இருப்பினும் முதல் போட்டியில் வான் விக் "டக்-அவுட்டாகி' ஏமாற்றினார். இன்றைய போட்டியில் இவரது அனுபவம் கைகொடுத்தால் மட்டுமே, ஈகிள்ஸ் அணி அடுத்த சுற்றில் விளையாடுவது குறித்து யோசிக்க முடியும். ரியான் மெக்லாரன் முதல் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், இவருக்கு ஒத்துழைப்புதர வீரர்கள் இல்லாததால் தோல்வியடைய நேரிட்டது. இந்த அணியின் பந்துவீச்சு ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது. இன்றைய போட்டியில் ஈகிள்ஸ் அணியினர் அசத்தினால் மட்டுமே "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேற முடியும்.
இரு அணி வீரர்களும் வாழ்வா... சாவா... நிலையில் களமிறங்குவதால், அனல் பறக்கும் ஆட்டத்தை ரசிகர்கள் காணலாம்.
விக்டோரியா-வயம்பா பலப்பரீட்சை
புதுடில்லி: சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், டில்லியில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் "டி' பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் இலங்கையின் வயம்பா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெற்றி கண்ட உற்சாகத்தில் விக்டோரியா அணி களமிறங்குகிறது. இந்த அணியில் காமிரான் ஒயிட், ஷேன் ஹார்வுட், பிராட் ஹாட்ஜே, டேவிட் ஹசி, பீட்டர் சிடில் உள்ளிட்ட சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இன்றைய போட்டியிலும் விக்டோரியா அணியினர் பேட்டிங், பவுலிங்கில் அசத்தினால், இரண்டாவது வெற்றியை ருசிக்கலாம்.
வயம்பா அணி, டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றியது. இந்த அணியில் முபாரக், ஹெராத், மெண்டிஸ், ஜெயவர்தனா, மகரூப், உடவாட்டே, வான்டர்ட் உள்ளிட்ட சர்வதேச போட்டியில் விளையாடி அனுபவ வீரர்கள் உள்ளனர். இருப்பினும், முதல் போட்டியில் ஜெயவர்தனா மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். பவுலிங்கில் மெண்டிஸ் இரண்டு விக்கெட் வீழ்த்தி, நம்பிக்கை தந்தார். இன்றைய போட்டியில் அனுபவ வீரர்களுடன் இணைந்து இளம் வீரர்கள் கைகொடுத்தால் மட்டுமே, வெற்றி பெறமுடியும்.
யாருக்கு வாய்ப்பு:
"டி' பிரிவில் இடம் பெற்றுள்ள விக்டோரியா, டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. கடைசி போட்டியில் விளையாடும் வயம்பா அணி, வெற்றி பெறும் பட்சத்தில் மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றியுடன், 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகிக்கும். இந்நிலையில் "ரன்-ரேட்' அடிப்படையில் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும். வயம்பா அணியின் "ரன்-ரேட்' சற்று மோசமாக இருப்பதால், விக்டோரியா அணிக்கு எதிராக அபார வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது
0 comments:
Post a Comment