சாம்பியன்ஸ் லீக் தொடரின் பரபரப்பான போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடைசி பந்தில் பரிதாபமாக வீழ்ந்தது. துணிச்சலாக போராடிய சாமர்சட் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் ஐ.பி.எல்., நடப்பு சாம்பியனான இந்தியாவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, இங்கிலாந்தின் சாமர்சட் அணியை சந்தித்தது. டாஸ் வென்ற சாமர்சட் அணி கேப்டன் ஜஸ்டின் லாங்கர், பீல்டிங் தேர்வு செய்தார்.
லட்சுமண் துவக்கம்:
டெக்கான் அணி சார்பில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் துவக்க வீரராக லட்சுமண் களமிறங்கினார். இவர், வில்லோபி வீசிய முதல் ஓவரில், இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார். மறுபக்கம் கேப்டன் கில்கிறிஸ்ட் வழக்கம் போல் அதிரடி காட்டினார். வில்லோபி வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இந்த நேரத்தில் தாமஸ் வீசிய பந்தில் கில்கிறிஸ்ட்(18) அவுட்டாக, ரன் வேகம் குறைந்து போனது. சுமன்(6) ஏமாற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சைமண்ட்ஸ்(8) சொதப்பினார். பொறுப்பாக ஆடிய லட்சுமண் 35 பந்தில் 46 ரன்களுக்கு(7 பவுண்டரி), டிரகோ பந்துவீச்சில் போல்டானார். கடைசி கட்டத்தில் ஸ்டைரிஸ்(13), வேணுகோபால் ராவ்(22) ஓரளவுக்கு கைகொடுத்தனர். "டெயிலெண்டர்கள்' சோபிக்க தவற, டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய சாமர்சட் அணி, ஆர்.பி.சிங் வேகத்தில் ஆட்டம் கண்டது. முதலில் டிரஸ்கோதிக்கை(14) வெளியேற்றினார். பின்னர் 6வது ஓவரில் டி பிரியுன்(19), லாங்கரை(15) அவுட்டாக்கி இரட்டை "அடி' கொடுத்தார். ஓஜா சுழலில் கீஸ்வெட்டர்(5), சுப்பையா(19) வீழ்ந்தனர். சுமன் பந்துவீச்சில் டிரகோ(12), பிலிப்ஸ்(5) நடையை கட்டினர். இதையடுத்து 13.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
கடைசி ஓவர்:
இதற்கு பின் ஹில்டிரத், தாமஸ் இணைந்து மனம் தளராமல் போராடினர். கடைசி ஓவரில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் தான் இருந்தன. ஸ்டைரிஸ் பந்துவீசினார். முதல் பந்தில் ஹில்டிரத்(25) போல்டானார். அடுத்த பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் மேக்ஸ் வாலர்(0) அவுட்டாக, "டென்ஷன்' எகிறியது. 4வது பந்தில் தாமஸ் ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் ரன் இல்லை. 6வது பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்த தாமஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். சாமர்சட் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தாமஸ் 17 பந்தில் 30 ரன்களுடன்(4 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். இவரே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இத்தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஐ.பி.எல்., அணிகளான பெங்களூரு, டில்லி, டெக்கான் ஆகிய மூன்றும் முதல் போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளன
0 comments:
Post a Comment