இளைஞர்களின் வெற்றி: பாண்டிங்

இளம் வீரர்களின் அபார ஆட்டம் தான், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வெல்ல முக்கிய காரணம்,'' என ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் (மினி உலக கோப்பை) தொடர் நடந்தது. செஞ்சுரியனில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
வாட்சன் சதம்:
இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் கைகொடுத்தார். இவர் சதம் அடித்து விளாச, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபியை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதித்தது. இதற்கு முன் கடந்த 2006 ம் ஆண்டு ஆஸ்திரேலியா கோப்பை வென்றிருந்தது.
இவ்வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
கடந்த 18 மாதங்களாக ஆஸ்திரேலிய அணி பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. திறமையான மற்றும் அனுபவ வீரர்கள் பலர் அணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர். தற்போது அணியில் இளம் மற்றும் அறிமுக வீரர்கள் தான் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் அபார ஆட்டம் அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளது. பைனலில் ஆஸ்திரேலிய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நெருக்கடியில் இருந்த ஆஸ்திரேலிய அணியை இளம் வீரர்களான வாட்சன், ஒயிட் இணைந்து மீட்டு வெற்றிக்கு அழைத்து சென்றனர். ஆஷஸ் தொடர் தோல்விக்குப் பின், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டது. அதே உற்சாகத்துடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் செயல்பட்டுள்ளோம். கடந்த இரண்டு வாரங்களாக ஆஸ்திரேலியாவின் ஆட்டம் பாராட்டும்படியாக அமைந்தது. இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார்.
உலக சாம்பியன்:
சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியதன் மூலம், தன்னை உலக சாம்பியனாக கிரிக்கெட் அரங்கில் மீண்டும் நிலைநிறுத்தி உள்ளது ஆஸ்திரேலியா. இம்முறை இந்தியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளாக கருதப்பட்டன. ஆனால் இந்த அணிகள் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாத நிலையில் பெரும் ஏமாற்றம் அளித்துள்ளன

0 comments:

Post a Comment