விளையாட்டில் அரசியல் கலப்பது நல்லதல்ல

விளையாட்டில் அரசியல் கலப்பது சிறந்த வீரர்களைச் சோர்வடையச் செய்துவிடும் என, முன்னாள் தடகள வீராங்கனை சைனி வில்சன் தெரிவித்தார்.

கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரியில் 16-வது ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் கலந்துகொள்ள வந்திருந்த, முன்னாள் தடகள வீராங்கனை சைனி வில்சன், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இந்தியாவில், கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதேபோல, அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தற்போது குத்துச்சண்டை, துப்பாக்கி சுடும் பிரிவுகளில் நமது வீரர்கள் சாதனைபுரிந்து வருகின்றனர்.

மூணாறில் விளையாட்டு மைதானம் அமைத்து சிறந்த வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல, கொடைக்கானலிலும் அமைக்கலாம்.

இந்தியா முழுவதும் கிராமங்களில் உள்ள திறமையானவர்களைக் கண்டெடுத்து, அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து, முறையான பயிற்சி அளித்தால், சர்வதேச அரங்கில் நமது வீரர்கள் சாதனைகளைப் படைப்பர் என்றார் அவர்.

முன்னதாக, விளையாட்டுப் போட்டிகளை கல்லூரியின் இணைத் தாளாளர் டாக்டர் கீதா ஆப்ரகாம் தொடக்கிவைத்தார்.

4 அணிகளாக மாணவ, மாணவியர் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

பரிசளிக்கும் நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளர் சாம் ஆப்ராகாம் தலைமை வகித்தார்.

வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு தடகள வீராங்கனை சைனி வில்சன் பரிசுகளை வழங்கினார். இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மார்க் அணியினர் பெற்றனர்.

கல்லூரி முதன்மை செயல் அலுவலர் டேனியல் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் டீன் நிஷாபாலு, ஒருங்கிணைப்பாளர் பாலு, உடற்கல்வி ஆசிரியர்கள் சத்தீஸ்குமார், ஆஷா சந்திரன் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்

0 comments:

Post a Comment