1996-ம் ஆண்டு உலகக்கோப்பை ஹீரோக்கள் என்று இருவரைக் குறிப்பிடலாம். ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா ஆகிய இருவர் தான் அந்த ஹீரோக்கள்.
÷1965-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்தார் அரவிந்த டி சில்வா. வலது கை ஆட்டக்காரரான இவர், 1984-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக விளையாடினார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஆடும் வாய்ப்பு டி சில்வாவுக்கு கிட்டியது. ஸ்வீப் ஷாட் அடிப்பதில் வல்லவர்.
1996-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் முதல் சுற்றில் ஜிம்பாப்வே, கென்யா அணிகளுக்கு எதிராக முறையே 91 மற்றும் 145 ரன்கள் அடித்து இலங்கை அணியின் மேட்ச் வின்னராகத் திகழ்ந்தார். கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஜவஹல் ஸ்ரீநாத், இலங்கையின் தொடக்க வீரர்களை வீழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து 4-வது வீரராக வந்த டி சில்வா, சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து இலங்கை அணி 252 ரன்களை எட்டுவதற்கு காரணமாக இருந்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 120 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள், பீல்டிங் நின்ற இலங்கை வீரர்கள் மீது பாட்டில்களை தூக்கி எறிந்தனர். இதையடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இலங்கை அணி மோதியது. அப்போட்டியில் டி சில்வா சிறப்பாக பந்துவீசி 42 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 107 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டி சில்வாவின் சதத்தால் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
இறுதி ஆட்டம் உள்பட 2 ஆட்டங்களில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ÷2003 உலகக்கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வுபெற்றார்.
93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20 சதங்கள், 22 அரைசதங்கள் உள்பட 6,361 ரன்களைக் குவித்துள்ளார். 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதேபோல் 308 ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள், 64 அரைசதங்கள் உள்பட 9,284 ரன்களும், 106 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 11 முறை ஆட்டநாயகனாகவும், 4 முறை தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 31 முறை ஆட்டநாயகனாகவும், 3 முறை தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1990-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக டி சில்வாவை விஸ்டன் பத்திரிகை தேர்வு செய்தது. விஸ்டன் பத்திரிகை வெளியிட்ட சிறந்த 100 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 6 முறை இடம்பிடித்துள்ளார்.
0 comments:
Post a Comment