கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன்

4 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியதோடு, ஆஸ்திரேலியாவுக்கு உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்தவர் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்.

இவர் 1965 ஜூன் 2-ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிறந்தார். தனது 6-வது வயதில் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார் ஸ்டீவ் வாக்.

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டீவ் வாக், 1985-ல் மெல்போர்னில் நடந்த இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கிறைஸ்ட் சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் 74 ரன்களை எடுத்ததோடு, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தார்.

இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய ஒருதினப் போட்டி அணியில் இடம்பிடித்தார். அதன்பிறகு முத்தரப்பு போட்டியில் விளையாடிய ஸ்டீவ் வாக் இரு அரைசதங்கள் உள்பட 266 ரன்களை குவித்ததோடு, 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

1987-ம் ஆண்டு இந்திய துணை கண்டத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த ஸ்டீவ் வாக், அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு துருப்புச் சீட்டாக அமைந்தார். அந்த தொடரில் 167 ரன்களை குவித்த அவர், 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

1995-96-களில் உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தார். அதைத்தொடர்ந்து 1997-ல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனானார். அதன் பிறகு ஏராளமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றிகளைக் குவித்தது.

1999-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஸ்டீவ் வாக் தலைமையிலான அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

2003-04-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் வாக் 32 சதம், 50 அரை சதம் உள்பட 10,927 ரன்களும், 92 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

325 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3 சதம், 45 அரை சதம் உள்பட 7569 ரன்களும், 195 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 356 போட்டிகளில் விளையாடி 79 சதம், 97 அரைசதம் உள்பட 17,428 ரன்கள் எடுத்துள்ளார். 249 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்

0 comments:

Post a Comment