நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என்று பெயரெடுத்தவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஷான் போலாக்.
இவர் 1973 ஜூலை 16-ம் தேதி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே பெüலிங், பேட்டிங் என இரண்டிலும் சிறந்து விளங்கிய போலாக், 1995-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக களம் கண்டார்.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போலாக், அடுத்த சில நாள்களிலேயே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் களம்கண்டார். அப்போதைய வேகப்பந்து வீச்சாளர் ஆலன்டொனால்டிடம் இருந்து பந்துவீச்சு நுணுக்கங்களை கற்றுக்கொண்ட போலாக், டொனால்டின் ஓய்வுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.
2000-ம் ஆண்டு சூதாட்டப்புகாரில் சிக்கிய அப்போதைய கேப்டன் ஹான்சி குரோனியேவுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து போலாக் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனானார்.
இவரது தலைமையிலான 2003 உலகக்கோப்பை போட்டியில் மோசமாக விளையாடியது. இதனால் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார் போலாக். டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்திய உலகின் 10-வது வீரர், தென்னாப்பிரிக்காவின் முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
2008 பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் ஆட்டத்தோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து போலாக் ஓய்வுபெற்றார். 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள போலாக், இரண்டு சதம் உள்பட 3,781 ரன்களையும், 421 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இதேபோல் 303 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் உள்பட 3,519 ரன்களையும் 393 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்தவரை ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளேயே இருந்தார். கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் எடுத்த 6 வீரர்களில் இவரும் ஒருவர்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பௌலிங் தரவரிசையில் முதல் இடம், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம், டெஸ்ட் பேட்டிங்கில் 37-வது இடம், ஒருநாள் பேட்டிங்கில் 34-வது இடம் ஆகிய இடங்களைப் பிடித்துள்ளார்.
0 comments:
Post a Comment