மிடில் ஆர்டரில் கலக்கியவர்

ஆஸ்திரேலியாவின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தவர் டேமியன் மார்டின்.

இவர் 1971 அக்டோபர் 21-ம் தேதி ஆஸ்திரேலியாவின் டார்வினில் பிறந்தார்.​ வலது கை பேட்ஸ்மேனான இவர்,​​ 1992-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக முதன்முதலாக களம் கண்டார்.​ ​

அப்போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அவர்,​​ அந்த தொடரில் சிறப்பாக விளையாடி 168 ரன்கள் குவித்தார்.​ அதே ஆண்டில் ஒருதின அணியிலும் இடம்பிடித்தார்.​ ​

2003-ல் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.​ ​

அப்போட்டியில் அவர் 88 ரன்கள் எடுத்து இறுதிவரை ​ ஆட்டமிழக்காமல் இருந்தார்.​ அவருடைய அதிரடி ஆட்டம் ஆஸ்திரலிய அணி கோப்பையை வெல்ல உதவியாக இருந்தது என்றால் அது மிகையல்ல.

2000-ல் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய மார்டின்,​​ 2001-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விஸ்டனால் தேர்வு செய்யப்பட்டார்.

2004-ல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரு சதங்களை விளாசி அத்தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வெல்வதற்கு காரணகர்த்தவாக அமைந்தார்.

அதன்பிறகு இந்திய மண்ணில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி 30 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெறுவதற்கு உதவினார்.​ அத்தொடரில் தொடர்நாயகன் விருதையும் அவர் தட்டிச்சென்றார்.​ ​

2006 டிசம்பரில் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.​ ​

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மார்டின் 4,406 ரன்கள் குவித்துள்ளார்.​ இதில் 13 சதங்கள்,​​ 23 அரை சதங்கள் அடங்கும்.​ 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,346 ரன்கள் குவித்துள்ளார்.​ முதல்தர கிரிக்கெட்டில் 204 போட்டிகளில் 14,630 ரன்கள் குவித்துள்ளார்.

​ சமீபத்தில் முடிவடைந்த ஐ.பி.எல்.​ கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக மார்டின் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

0 comments:

Post a Comment