என்.பி.ஏ., பாணியில் ஐ.பி.எல்., போட்டி

அமெரிக்காவின் என்.பி.ஏ., (தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பு) பாணியில் ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த, இந்திய கிரிக்கெட் போர்டு ஆலேசானை நடத்தி வருகிறது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நிர்வாகிகள் கூட்டம் கடந்த 17 ம் தேதி மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில், போட்டிகள் நடத்தும் முறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடந்தது.

இதன் படி என்.பி.ஏ., தொடரில் இருக்கும் போட்டி முறைகளை பின்பற்றி, ஐ.பி.எல்., போட்டிகளை நடத்துவது என பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. இது குறித்து அடுத்த மாதம், ஐ.பி.எல்., ஆட்சிக் குழு நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. அதற்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

என்.பி.ஏ., முறை:

தற்போது கொச்சி, புனே அணிகளை சேர்த்து மொத்தம் 10 அணிகள் ஐ.பி.எல்., அமைப்பில் இடம் பெற்றுள்ளன. கடந்த முறை நடந்த 3 வது ஐ.பி.எல்., தொடரில் 60 போட்டிகள் நடந்தன. அடுத்த முறை அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தற்போதுள்ள முறைப்படி 94 போட்டிகள் வரை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், என்.பி.ஏ., பாணியில் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ., முடிவுசெய்துள்ளது. இதன் படி மொத்தம் உள்ள 10 அணிகள் "ஏ', "பி' என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். "ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள ஒரு அணி, மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறை மோதும்.

அதே சமயம் "பி' பிரிவில் இடம் பெற்ற மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் அடிப்படையில் ஒரு அணி குறைந்தது 13 போட்டிகள் வரை விளையாடும். முடிவில் முதல் 4 இடங்களை எட்டும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

"சூப்பர் சிக்ஸ்' முறை:

என்.பி.ஏ., முறைக்கு எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில், "ரவுண்ட் ராபின்' முறையில் போட்டிகளை நடத்தவும் பி.சி.சி.ஐ., ஆலோசித்து வருகிறது. இதன் படி 10 அணிகள் "ஏ', "பி' என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி, மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள், "சூப்பர்-சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறும். இதில், ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முதல் 4 இடங்களை பெறும் அணிகள் அரையிறுதி வாய்ப்பை எட்டும். ஆனால் இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட அணி, மற்றொரு முக்கியமான அணியை சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போகலாம்.

இந்த இரண்டு புதிய முறைகளுள் ஒன்றை, அடுத்த ஆண்டு நான்காவது ஐ.பி.எல்., தொடரில் நடைமுறைப்படுத்த பி.சி.சி.ஐ., தீவிரம் காட்டி வருகிறது. ஐ.பி.எல்., ஆட்சிக் குழுவும் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment