தோனி-3, காம்பிர்-2, ஜடேஜா-0

டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வீரர்களின் மோசமான ஆட்டமே முக்கிய காரணம். வீரர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப, அவர்களது "மார்க்' வருமாறு:


ரெய்னா-7/10

போட்டி- 5, ரன்- 219, அதிகபட்சம்- 101, சராசரி- 43.80, ஸ்டிரைக் ரேட் -146.

இந்திய அணி சொதப்பிய போதும், ரெய்னா மட்டும் நம்பிக்கை அளித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த இவர், "டுவென்டி-20' வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இவரும் "ஷார்ட் பிட்ச்' பந்துகளை சமாளிப்பதில் திணறினார்.


நெஹ்ரா-6/10

போட்டி-5, ஓவர்- 20, விக்.,- 10

இந்திய அணியின் சிறந்த பவுலராக குறிப்பிடலாம். முக்கிய கட்டத்தில் எதிரணியின் விக்கெட்டை சாய்க்க இவரை தான், கேப்டன் தோனி தேடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி கட்டத்தில் சூப்பராக பந்துவீசினார். இலங்கைக்கு எதிரான போட்டியில், இவரது கடைசி பந்தில் கபுகேதரா சிக்சர் அடித்தது வேதனையான விஷயம்.


ஹர்பஜன் சிங்-5/10

போட்டி- 5, ரன் -27, விக்கெட்- 0

விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஆனாலும் மிகவும் துல்லியமாக பந்துவீசி கலக்கினார். பெரும்பாலான போட்டிகளில் முதல் ஓவரை அருமையாக வீசினார். இலங்கைக்கு எதிரான போட்டி தவிர, மற்ற ஆட்டங்களில் நம்பிக்கை காத்தார். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டிகளில் பேட்டிங்கில் கைகொடுத்த இவர், மோசமான தோல்வியை தவிர்க்க உதவினார்.


ரோகித் சர்மா 4/10

போட்டி: 3, ரன்-84, சராசரி 84, ஸ்டிரைக் ரேட் 155.55

ரோகித் சர்மா மீது கேப்டன் தோனிக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அதனால் அதிக போட்டிகளில் வாய்ப்பு அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 79 ரன்கள் எடுத்த இவர், அணியின் மானம் காத்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில், அம்பயர் பில்லி பவுடனின் தவறான தீர்ப்பால் அவுட்டானார்.


பியுஸ் சாவ்லா- 3/10

போட்டி-2, விக்.,-1

வேகத்துக்கு ஒத்துழைக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில், ஓரளவுக்கு சுழலில் அசத்தினார். இலங்கைக்கு எதிராக துவக்கத்தில் அபாரமாக பந்துவீசினார். கடைசி நேரத்தில் ஏஞ்சலோ மாத்யூஸ் அதிரடியில் கலங்கிப் போனார்.


காம்பிர்-2/10

போட்டி: 4, ரன்- 69, சராசரி- 17.25, ஸ்டிரைக் ரேட் -111.29

முதல் உலக கோப்பை தொடரில் ஹீரோவாக ஜொலித்த காம்பிர், இம்முறை ஏமாற்றம் அளித்தார். சேவக் இல்லாத நிலையில் இவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்த இவர், "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் திணறினார். இவர், இலங்கைக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுகளுக்கு இடையே மந்தமாக ஓடியதால், வலுவான ஸ்கோரை எட்ட முடியவில்லை.


தினேஷ் கார்த்திக்-2/10

போட்டி-2, ரன்-29, அதிகபட்சம்- 16, சராசரி- 14.50, ஸ்டிரைக் ரேட்- 100.00

கிடைத்த 2 வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தவறினார். பேட்டிங் வரிசையில் துவக்க வீரராக களமிறங்கி ஏமாற்றினார்.


யுவராஜ் சிங்-1/10

போட்டி-5, ரன்- 74, அதிகபட்சம்- 37, சராசரி 18.50, ஸ்டிரைக் ரேட் 105.71

ஐ.பி.எல்., தொடரில் சொதப்பிய இவர், கரீபிய மண்ணிலும் ஏமாற்றினார். மோசமான "பார்ம்' மற்றும் போதிய உடற்தகுதி இல்லாமல் தவித்தார். அணியின் மூத்த வீரர் என்ற பொறுப்பை உணராமல் செயல்பட்டார். பீல்டிங்கிலும் கோட்டைவிட்டார்.


முரளி விஜய்-1/10

போட்டி-4, ரன்-57, அதிகபட்சம் 48, சராசரி 14.25, ஸ்டிரைக் ரேட் 83.82

ஐ.பி.எல்., தொடரில் சென்னை கிங்ஸ் அணிக்காக அசத்திய இவர், உலக கோப்பை தொடரில் சாதிக்க தவறினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டும் 48 ரன்கள் எடுத்தார். இவரது அணுகுமுறை மற்றும் ஆட்ட நுணுக்கம் மோசமாக இருந்தது. பவுன்சர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.


யூசுப் பதான்- 2/10

போட்டி-5, ரன் 42, சராசரி 10.50, விக்.,-4

அதிரடியாக விளையாடக்கூடியவர் என்ற அடிப்படையில் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், பவுன்சர்களில் அவுட்டாகி ஏமாற்றினார். பந்துவீச்சில் மட்டும் அவ்வப்போது ஆறுதல் அளித்தார்.


ஜாகிர் கான் -2/10

போட்டி-3, ஓவர் 11, விக்., 2

ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அசத்திய இவர், உலக கோப்பை தொடரில் ஏமாற்றினார். அணியின் பந்துவீச்சை வழிநடத்த வேண்டிய இவர், சரியான அளவில் துல்லியமாக பந்துவீச தவறினார்.


தோனி -3/10

போட்டி-5, ரன் -85, அதிகபட்சம் 29, சராசரி 42.50, ஸ்டிரைக் ரேட் 149.12

கேப்டனாக தவறான யுக்திகளை கையாண்டார். பந்துகள் எகிறும் பார்படாஸ் ஆடுகளத்தில், இரண்டு வேகங்களுடன் களமிறங்கினார். தொடர்ந்து ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளித்து வெறுப்பேற்றினார். பேட்டிங் வரிசையில் சரியான இடத்தில் களமிறங்காத இவர், பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை.


பிரவீண் குமார் 2/10

போட்டி-2, ஓவர்-4, விக்.,-2,

லீக் சுற்றில் நன்றாக தான் பந்துவீசினார். ஆனால் காயமடைந்தால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. சூப்பர்-8 சுற்றில் இவர் இல்லாதது பெரும் குறையாக இருந்தது.


வினய் குமார்- 2/10

போட்டி-1, ஓவர்-4, விக்.,-2.

பிரவீண் குமார் காயமடைந்ததும் இவருக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், வீணாக தாமதம் செய்தார்கள். இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜெயசூர்யா, சங்ககரா போன்ற அனுபவ வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றி திறமை நிரூபித்தார். இப்போட்டியில் தனது கடைசி ஓவரில் 17 ரன் கொடுத்த இவர், ஏமாற்றம் அளித்தார்.


ரவிந்திர ஜடேஜா-0/10

போட்டி-4, ரன் -9, அதிகபட்சம் 5, ஸ்டிரைக் ரேட் 81.81, விக்-2

இத்தொடரில் மிக மோசமாக செயல்பட்டவர் இவர் தான். ஐ.பி.எல்., தொடரில் தடை விதிக்கப்பட்ட இவரை, வீணாக தேர்வு செய்தனர். முக்கிய கட்டங்களில் மோசமாக பந்துவீசிய இவர் "சிக்சர்களாக' விட்டுக் கொடுத்தார். "கேட்ச்' வாய்ப்புகளை வீணடித்தது இவர், பேட்டிங்கிலும் சொதப்பினார்.

0 comments:

Post a Comment