இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்தில் அவமானம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்ற, இந்திய அணியினர் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, முன்னணி வீரர் மானவ்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் டார்சட் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் சார்பில், உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்க சென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு, இங்கிலாந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து அணியின் மானேஜர் பத்மனாபன், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு, எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது:

பயிற்சி முடித்து இந்திய வீரர்கள் தங்களது ஓட்டலுக்கு செல்ல பஸ்சில் ஏற முயன்றனர். அப்போது கதவை அடைத்த டிரைவர், போக்குவரத்து துறை அதிகாரி மைக்கிடம் புகார் கூறினார். உடனே அங்கு வந்த மைக், நமது வீரர்களை பார்த்து திட்டினார்.

மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட இவர், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார். மானவ்ஜித் சிங்கிடம் பஸ்சில் இருந்து கீழே இறங்கும்படி கூறினார். இதற்கு மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்தார். இது ஒன்றும் மானவ்ஜித்தின் சொந்த வாகனம் அல்ல, என்று ஏளனமாக பேசினார்.

முதல் சம்பவம்:

இரண்டு நாட்களுக்கு முன் நமது வீராங்கனைகள் ஷிரயாசி, ஷேகன் ஆகியோரை பஸ்சை விட்டு வெளியேற்றி, மற்ற நாட்டு வீரர்களுக்கு முன் அவமானப்படுத்தினர். இது பற்றி போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் எடுத்துக் கூறி, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இச்சம்பவத்தால், தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என, மானவ்ஜித் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

எங்களை திட்டமிட்டு வேண்டுமேன்றே அவமானப்படுத்தினர். எதற்காக இப்படி நடந்து கொண்டனர் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் இதற்கு முன் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்றுள்ளோம். ஆனால் இதுபோன்ற நிலையை எப்போதும் எதிர்கொண்டதில்லை. இந்நிலையில் போக்குவரத்து ஊழியரிடம் தவறாக நடந்தது, பெண் டிரைவரை நாங்கள் திட்டினோம் போன்ற குற்றச்சாட்டுக்கள் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

வீடியோ ஆதாரம்:

இதெல்லாம் நிர்வாகிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தெரிவித்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள். ஆனால் இவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த குற்றச்சாட்டுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். சம்பவத்துக்கு பின் அந்த பெண் டிரைவரே, நாங்கள் அப்படிப்பட்ட செயலில் ஈடுபடவில்லை, என தெரிவித்துள்ளார். தவிர, இவற்றை மற்ற நாடுகளின் வீரர்கள் நேரில் பார்த்துக்கொண்டிருந்தனர். இதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.

திறனை பாதிக்கும்:

பொதுவாக துப்பாக்கி சுடுதல் போட்டி என்பது மனநிலை சம்பந்தப்பட்டது. இதற்கு மன அமைதி, ஒருமுகப்படுத்துதல் போன்றவை இருந்தால் தான், போட்டிகளில் வெற்றி பெற முடியும். தொடரை வெல்லும் போட்டியில் எப்போதும் முன்னிலையில் இருப்பது இந்திய வீரர்கள் தான். ஆனால் நடந்த சம்பவங்களால் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மானவ்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.


மன்னிப்பு கேட்டனர்

இந்திய வீரர்கள் அவமானப்படுத்தப்பட்டதுக்கு சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு அமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்.,) மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ரைபிள் சங்கத்தின் செயலாளர் ராஜிப் பாட்யா கூறுகையில்,"" நமது பிரதிநிதிகளுக்கும், போட்டி அமைப்பாளர்கள் இடையில் நடந்த கூட்டத்தில், அமைப்பாளர்கள் முறைப்படி மன்னிப்பு கேட்டனர். இருப்பினும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் கேட்டுள்ளோம்,'' என்றார்.

கில் நடவடிக்கை

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதுகுறித்து விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,"" லண்டனில் <உள்ள இந்திய தூதரகம் மற்றும் தேசிய ரைபிள் கூட்டமைப்பு (என்.ஆர்.ஏ.ஐ.,) நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு கில் விசாரித்தார். பின் இதன் முழுவிபரத்தை அனுப்புமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comments:

  1. MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
    அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
    Feel பண்ணக்கூடாது..

    ReplyDelete