1999-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர்.
÷இவர் 1971 செப்டம்பர் 4-ம் தேதி தென்னாப்பிரிக்காவின் டர்பனில் பிறந்தார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை வேகப்பந்து வீச்சாளரான குளூஸ்னர், 1996 ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு தின போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்காக முதன்முதலாக களம் கண்டார்.
÷அதன்பிறகு அதே ஆண்டில் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய குளூஸ்னர், 1999-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியிலும் இடம்பிடித்தார்.
÷உலகக் கோப்பையில் பல ஆட்டங்களில் இக்கட்டான நேரங்களில் களமிறங்கிய குளூஸ்னர், அதிரடியாக விளையாடி அணி வெற்றிபெற உதவினார். தென்னாப்பிரிக்க அணி அரை இறுதிக்குள் நுழைவதற்கு அவரது ஆட்டம் காரணம் என்றால் அது மிகையாகாது.
÷அரை இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக ஆடிய குளூஸ்னர், வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.
இதனால் ஆட்டம் "டை'யில் முடிவடைந்தது.
÷இதனால் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியும் இறுதிப் போட்டியில் நுழைய இயலாமல் போனது. உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய குளூஸ்னர் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
2004-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து குளூஸ்னர் ஓய்வுபெற்றார்.
÷49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குளூஸ்னர், 1906 ரன்களையும், 80 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதேபோல் 171 ஒருநாள் போட்டிகளில் 3576 ரன்களும், 192 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 197 போட்டிகளில் 9521 ரன்களையும், 508 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
÷1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய குளூஸ்னர் 2000-ம் ஆண்டின் சிறந்த வீரராக விஸ்டனால் தேர்வு செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment