பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், தரம்வாய்ந்த டெஸ்ட் வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் வேதனை தெரிவித்தார்.
இந்தாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியது. இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக விசாரணைக் கமிட்டி முன் ஆஜரான முகமது யூசுப், மேலும் கூறியது:
பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு தரம்வாய்ந்த வீரர்கள் இல்லை.
தற்போதுள்ள அணி இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கு ஏற்ற அணி. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இருபது ஓவர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது துரதிர்ஷ்டவசமானது.
இதைச் சரிசெய்து தரம்வாய்ந்த டெஸ்ட் வீரர்களை உருவாக்க கிரிக்கெட் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் காலங்களில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்விகளைச் சந்திக்க நேரிடும் என்றார்.
தற்போதுள்ள வீரர்களில் ஏராளமானோர் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்கே ஆர்வம் காட்டுகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்பவில்லை என்றார்.
ஆஸ்திரேலிய வீரர் ஹாடினுக்கு அபராதம்
பிரிட்ஜ்டவுன், மே 18: இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின்போது நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாடினுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சைடுபாட்டம் பந்தில், கீஸ்வெட்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஹாடின். அப்போது அவருக்கு மேற்கிந்திய தீவுகள் நடுவர் பில்லி டாக்ட்ரோவ் அவுட் கொடுத்தார். அம்பயரின் இந்த தீர்ப்புக்கு ஹாடின் எதிர்ப்புத் தெரிவித்தார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதிகளை மீறியதாக ஹாடினுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.இந்தப்போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment