மிகப் பிரம்மாண்டமாக நடந்த ஐ.பி.எல்., தொடர் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது. ஒரே அணிக்காக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் சேர்ந்து விளையாடினர். பாலிவுட் நட்சத்திரங்களின் பகட்டான வரவு, நடனப் பெண்களின் கவர்ச்சி ஆட்டம் என ஒவ்வொரு விஷயமும் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அதே நேரத்தில், தற்போதைய "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் புதுமைகள் எதுவும் இல்லை. போட்டிகள் அதிகாலை வரை நடப்பது, மழை அடிக்கடி தலைகாட்டுவது போன்றவை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை குறைத்துள்ளது. இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் சமீபத்தில் நடந்தது. இதன் பைனலில் சென்னை கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, கோப்பை வென்றது. இத்தொடரின் போது கொச்சி அணியின் பங்குகள் தொடர்பாக லலித் மோடி-சசி தரூர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சர்ச்சையை கடந்து, போட்டிகள் வெற்றிகரமாக நடந்தது தான் சிறப்பம்சம். ரசிகர்கள் அதிகரிப்பு: கடந்த இரண்டு ஐ.பி.எல்., தொடரை ஒப்பிடும் போது இம்முறை தான் அதிகம் பேர் ரசித்துள்ளனர். மொத்தம் 45 நாட்களில் நடந்த 60 போட்டிகளை கேபிள் "டிவி' மூலம் சுமார் 15 கோடி குடும்பங்கள் கண்டு களித்துள்ளன. இது கடந்த தொடரை காட்டிலும் 40 சதவீதம் அதிகம். தவிர, இன்டர்நெட்டில் "யூ-டியூப்' மூலமாக கோடிக்கணக்கான பேர் நேரடியாக பார்த்தனர். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தியேட்டர்களிலும் ஒளிபரப்பானது. வருமானம் அமோகம்: ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்ததால் இம்முறை "செட் மேக்ஸ்' சேனல் விளம்பரங்களுக்கான கட்டண தொகையை பன்மடங்கு உயர்த்தியது. அரையிறுதி, பைனல் போட்டிகளின் போது 10 வினாடிகளுக்கு ரூ. 12 லட்ச ரூபாய் கட்டணமாக நிர்ணயித்தது. ஐ.பி.எல்., போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை 10 ஆண்டுகளுக்கு 8, 200 கோடி ரூபாய் கொடுத்து பெற்ற "செட் மேக்ஸ்' நிறுவனம், மூன்றாவது தொடரின் மூலம் மட்டும் 750 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. ஆதரவு குறைவு: இப்படி பண மழை பொழிந்த ஐ.பி.எல்., தொடரோடு ஒப்பிடுகையில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு ஆதரவு மிகவும் குறைவு. இம்முறை 17 நாட்களில் 27 போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகளை ஒளிபரப்பும் ஈ.எஸ்.பி.என்., சேனல் வெறும் 200 கோடி ரூபாய் தான் வருமானம் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி போட்டிகள் நள்ளிரவை கடந்து நடப்பதால் ரசிகர்கள் கண் விழித்து பார்க்க தயாராக இல்லை. போட்டிகள் நடக்கும் வெஸ்ட் இண்டீசிலும், ரசிகர்கள் மத்தியில் மவுசு இல்லை. இலவசமாக டிக்கெட் கிடைத்தால் மட்டுமே போட்டிகளை காண வருகின்றனர். ரசிகர்களை கவர, இசைக்கருவிகளை மைதானத்துக்குள் எடுத்து வர ஐ.சி.சி., அனுமதி அளித்துள்ளது. எது உயர்ந்தது: பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஐ.பி.எல்., போட்டிகளோடு ஒப்பிடுகையில், "டுவென்டி-20' உலக கோப்பை தான் சிறந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஊழல், சூதாட்டம், லஞ்சம் போன்றவை இல்லை. "கலப்படம் இல்லாத உண்மையான கிரிக்கெட்டை' உலக கோப்பை தொடரில் தான் காண முடிகிறது என்று அடித்துச் சொல்கின்றனர். இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.
0 comments:
Post a Comment