இரவு "பார்ட்டிக்கு' தடை! * இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு

ஐ.பி.எல்., சர்ச்சையை தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் போது நள்ளிரவு "பார்ட்டிகளில்' பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


வீரர்கள் அனைவரும் இரவு 9.30 மணிக்குள் தங்களது "ரூமிற்கு' திரும்பி விட வேண்டும் என, பி.சி.சி.ஐ., கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது.


சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் போது தினமும் நள்ளிரவு "பார்ட்டிகள்' நடந்தன. அதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இதனால் காலையில் சோர்வடைந்தனர். உடல்தகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது.


போட்டிகளில் துடிப்புடன் செயல்பட முடியாமல் போனது. இதையடுத்து வரும் ஐ.பி.எல்., தொடரில் இரவு நேர "பார்ட்டிகளுக்கு' தடை விதிக்கப்படும் என, இதன் தற்காலிக தலைவர் சிரயு அமின் அறிவித்தார்.


அபராதம் விதிக்கப்படும்: இந்த "பார்முலாவை' இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) உடனடியாக கடைபிடிக்க துவங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீசில் தற்போது நடக்கும் "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் பற்றி இந்திய கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளது.


அதில், இரவு நேரங்களில் வெளியே சுற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவு பார்ட்டிகளில் வீரர்கள் பங்கேற்க இயலாது. அனைவரும் இரவு 9.30 மணிக்குள் தங்களது "ரூமிற்கு' திரும்பி விட வேண்டும். இதனை கண்டிப்புடன் கண்காணிக்கும்படி, அணி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.


இரவில் விரைவாக உறங்கி; காலையில் விரைவில் எழுந்திருக்க வேண்டும். பயிற்சிக்கு சரியான நேரத்தில் வர வேண்டும். தாமதமாக பயிற்சிக்கு வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து பரிசுகள் பெறக் கூடாது.


யாராவது பரிசு கொடுக்க முன்வந்தால், அது பற்றி அணி நிர்வாகத்துக்கு முதலில் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பி.சி.சி.ஐ., விதித்துள்ளது.

0 comments:

Post a Comment