அலுமினிய கிரிக்கெட் பேட் அறிமுகம்

கிரிக்கெட் அரங்கில் இன்னொரு புரட்சி. அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட பேட், புதுப்பொலிவுடன் அறிமுகமாகிறது.

கிரிக்கெட்டில் அவ்வப்போது புதுமைகள் அரங்கேறும். எஸ்.ஜி, கூக்கபரா என இரண்டு வகை பந்துகள் உண்டு. இதே போன்று பல்வேறு வகையான பேட் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் மிக நீளமான கைப்பிடி கொண்ட "மங்கூஸ்' வகை பேட் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை பயன்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் ஹைடன், சில போட்டிகளில் அதிரடி காட்டினார்.

இந்திய கண்டுபிடிப்பு:

தற்போது அலுமினியத்தாலான பேட் ஒன்றை இந்தியாவை சேர்ந்த இன்ஜினியர் விவேக் லகோத்தியா உருவாக்கியுள்ளார். "டென்னிஸ் பந்து கிரிக்கெட்' போட்டிக்கு ஏற்ற அலுமினிய பேட்டை இன்று டில்லியில் அறிமுகம் செய்கிறார். மூன்று மாதங்களுக்கு பின் "லெதர்' பந்து மூலம் விளையாடப்படும் வழக்கமான போட்டிக்கான பேட்டை அறிமுகம் செய்ய உள்ளார்.

மரங்கள் பாதுகாப்பு:

இவ்வகை பேட் தயாரிக்க, விமானத்துக்கான உயர் ரக அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. நவீன இயந்திரங்கள் மூலம் மிக நேர்த்தியாக உருவாக்குகின்றனர். இதன் தயாரிப்பு விலை ரூ. 500 முதல் ரூ. 800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மரத்தினால் செய்யப்பட்ட வழக்கமான பேட்டை விட, அலுமினிய பேட் எடை குறைவாக இருக்கும். தவிர, 5 மடங்கு அதிகமாக உழைக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உகந்தது. இதன் மூலம் பேட் தயாரிப்புக்காக காஷ்மீரில் உள்ள "வில்லோ' மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதை தவிர்க்கலாம். ஐ.சி.சி., அனுமதி அளிக்கும்பட்சத்தில் இவ்வகை பேட், போட்டிகளில் பயன்படுத்தப்படலாம்.

இது குறித்து அலுமினிய கம்பெனி ஒன்றை நடத்தி வரும் லகோத்தியா கூறியது:

இந்தியாவில் சுமார் 25 கோடி பேர் டென்னிஸ் பந்து மூலம் கிரிக்கெட் விளையாடுகின்றனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு 5 ஆயிரம் போட்டி தொடர்கள் நடத்தப்படுகின்றன. இவர்கள் மரத்திலான பேட்டை தொடர்ந்து பயன்படுத்தினால் விரைவில் காடுகள் அழிந்து விடும்.

எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி அலுமினிய பேட் உருவாக்கும் திட்டம் எனது மனதில் கடந்த ஆண்டு உதித்தது. இதனை பயன்படுத்துவதன் மூலம் பசுமையான உலகுக்கு ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளிக்கலாம்.

சச்சின் போன்றவர்கள் அதிக எடை கொண்ட பேட் பயன்படுத்துகின்றனர். இதற்கேற்ப அலுமினிய பேட்டின் அடிப்பகுதியின் எடையை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யலாம்.
இவ்வாறு லகோத்தியா கூறினார்.

ராஜஸ்தான் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத்தின் செயலர் மன்சூர் பெய்க் கூறுகையில்,""புதிய பேட் சிறப்பாக உள்ளது. அனைத்து வகையான "ஷாட்'களையும் எளிதாக அடிக்க முடிகிறது. தற்போது தான் வீரர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். மிக விரைவில் பிரபலமடையும்,''என்றார்.

டெனிஸ் லில்லி சர்ச்சை

கிரிக்கெட்டில் அலுமினிய பேட் பயன்படுத்திய வரலாறு உண்டு. கடந்த 1979ல் பெர்த்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி, அலுமினிய பேட்டுடன் களமிறங்கினார். இந்த பேட் மூலம், போத்தம் வீசிய பந்தில் 3 ரன் எடுத்தார். ஆனால், ஆஸ்திரேலிய கேப்டன் கிரக் சாப்பல், பவுண்டரி கிடைத்திருக்க வேண்டுமென நினைத்தார்.

மறுபக்கம் இங்கிலாந்து கேப்டன் மைக் பிரயார்லி, உலோகத்திலான அலுமினிய பேட் காரணமாக பந்து சேதமடைவதாக அம்பயரிடம் புகார் கூறினார். தனது பேட்டை மாற்ற லில்லி மறுக்க, ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

பின் மைதானத்துக்குள் வந்த சாப்பல், லில்லி கையில் வலுக்கட்டாயமாக மரத்திலான பேட்டை
கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த லில்லி, அலுமினிய பேட்டை, "பெவிலியன்' நோக்கி எறிந்து, சர்ச்சை கிளப்பினார்.

இந்த சம்பவத்துக்கு பின், மரத்தினால் தயாரிக்கப்பட்ட பேட் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது.

0 comments:

Post a Comment