"டுவிட்டர்' சாதனைக்கு சச்சின் "ரெடி'

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தனது "டுவிட்டர்' இன்னிங்சை துவக்கியுள்ளார். முதல் நாளில், இவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியுள்ளது.


மிக விரைவில் ஹாலிவுட் நடிகர் அஷ்டான் கச்சரின் 10 லட்சம் "டுவிட்டர்' ஆதரவாளர்கள் சாதனையை தகர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"டுவிட்டர்' இணையதளம் மூலம் சிறிய தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இதனை, சுருக்கமாக "இன்டர்நெட் எஸ்.எம்.எஸ்' என குறிப்பிடலாம். இதில் புகழ்பெற்றவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தங்களது ஆதரவாளர்களுக்கு இடையே தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வர். இதில் நேற்று சச்சினும் உறுப்பினராக சேர்ந்தார்.

இவரை பின்பற்றும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 70 ஆயிரத்தை தொட்டுள்ளது. "டுவீட்டர்' இணையதளத்தில் ஹாலிவுட் நடிகர் அஷ்டான் கச்சருக்கு தான் அதிகபட்சமாக 10 லட்சம் ஆதரவாளர்களாக உள்ளனர்.

டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் எடுத்து சாதித்துள்ள சச்சின், மிக விரைவில் அஷ்டான் சாதனையை முறியடிப்பார். "டுவிட்டர்' தளத்தில் சச்சினை பற்றி அறிய http://twitter.com/sachin_rt என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

வீரர்களுக்கு வாழ்த்து: "டுவீட்டரில்' இணைந்துள்ள சச்சின், "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சக இந்திய வீரர்கள் சாதிக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல, ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ள சேவக்கிற்கும் வாழ்த்து கூறியுள்ளார். தவிர, தனது அரிய "போட்டோ'க்களையும் வெளியிட்டுள்ளார்.


"கிரிக்கெட் கடவுள்': ஏற்கனவே "டுவீட்டரில்' உறுப்பினராக உள்ள டென்னிஸ் நட்சத்திரம் சானியா மற்றும் பாலிவுட் பிரபலங்கள் சச்சினை வரவேற்றுள்ளனர்.

ஷில்பா ஷெட்டி: "டுவிட்டர்' தளத்தில் "கிரிக்கெட் கடவுள்' சச்சின் இடம் பெற்றுள்ளார். இதனை அனைவரிடமும் சொல்லுங்கள். அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கிறேன்.

சானியா: "டுவிட்டர்' மூலம் உங்களை சந்திப்பது மிகவும் நல்ல விஷயம்.

ரித்தேஷ் தேஷ்முக்(நடிகர்): அஷ்டான் கச்சார் சாதனையை சச்சின் முறியடிக்க விரும்புகிறோம். அவரை பின்பற்றுங்கள்.

கரன் ஜோகர்(இயக்குனர்): உரத்த குரலில் சச்சினை வரவேற்கிறேன். "டுவீட்டர்' தளம் மூலம் உற்சாகம் அடையுங்கள்.

தீபிகா படுகோனே: எனக்கு மிகவும் பிடித்த சச்சினை வரவேற்கிறேன். இவர், "டுவிட்டரில்' அதிக ஆதரவாளர்கள் பெற்று சாதிக்க வேண்டும்.

சமீரா ரெட்டி: கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அரசனை வரவேற்போம். "வீ லவ் யு' சச்சின்.

0 comments:

Post a Comment