ஐபிஎல்-லுக்கு போட்டியாக புதிய கிரிக்கெட் அமைப்பு

ஐபிஎல்-லுக்கு போட்டியாக இங்கிலாந்தில் வேறொரு கிரிக்கெட் அமைப்பை உருவாக்க முயன்றதாக லலித் மோடி மீது பிசிசிஐ புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அவருக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ-க்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் ஐபிஎல்-லுக்கு போட்டியாக 20-20 கிரிக்கெட் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த லலித் மோடி திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக இங்குள்ள ஐஎம்ஜி ஒளிபரப்பு நிறுவனம், கிரிக்கெட் மைதான நிர்வாகிகள் மற்றும் அங்குள்ள 2 கவுண்டி அணிகளுடனும் பேச்சு நடத்தியுள்ளார். இது இங்கிலாந்தில் கிரிக்கெட்டை சீர்குலைக்கும் முயற்சி.

தற்போது ஐபிஎல்-லில் உள்ள வீரர்களை புதிய போட்டி அமைப்புக்கு இழுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக வீரர்களிடையே பிரச்னையை ஏற்படுத்தவும், அதிக பணம் கொடுத்து அவர்களை தனது அமைப்புக்கு கொண்டு வரவும் முயற்சி மேற்கொண்டார் என்றும் லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த மார்ச் 31-ம் தேதி ஐஎம்ஜி நிறுவன அதிகாரிகள், கிரிக்கெட் மைதான பிரதிநிதிகளுடன் லலித் மோடி பேச்சு நடத்தியுள்ளார். இதில் தொடர்புடைய இங்கிலாந்து நிறுவனத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கிரிக்கெட்டை மேலும் வணிக மையமாக்கும் எண்ணத்துடன் போட்டி ஐபிஎல்-லை உருவாக்க லலித் மோடி முயற்சித்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டை தரம்கெடச் செய்யும் நடவடிக்கை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது இ-மெயிலில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கேட்டு பிசிசிஐ, லலித் மோடிக்கு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐபிஎல்-லில் அணி ஏலம் முதல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அதன் ஆணையர் பதவியில் இருந்து லலித் மோடி அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

0 comments:

Post a Comment