லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போண்ணா ஜோடி வெற்றி பெற்றது. ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இளம் இந்திய வீரர்களான சோம்தேவ் தேவ்வர்மன், விஷ்ணுவர்தன் முதல் சுற்றோடு வெளியேறினர்.
லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிர்னி, அலெக்சாண்டர் பர்ரி ஜோடியை சந்தித்தது.
"டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை பூபதி-போபண்ணா ஜோடி 7-6 என கைப்பற்றியது. பின் எழுச்சி கண்ட பெலாரஸ் ஜோடி "டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை 7-6 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 8-6 என கைப்பற்றியது. இறுதியில் பூபதி-போபண்ணா ஜோடி 7-6, 6-7, 8-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
ஒற்றையரில் சொதப்பல்:
ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், பின்லாந்தின் ஜார்க்கோ நிமினனிடம் 3-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில், இந்தியாவின் விஷ்ணு வர்தன், சுலோவேனியாவின் பிளாஸ் காவ்சிச்சிடம் 3-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
சங்வான் ஏமாற்றம்:
ஆண்களுக்கான குத்துச்சண்டை "லைட் ஹெவிவெயிட் 81 கி.கி., எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் சங்வான், பிரேசிலின் புளோரன்டினோ யமாகுசி பால்கயோவை சந்தித்தார். இதில் சங்வான் 14-15 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
பம்பயலா "அவுட்:
லண்டன் ஒலிம்பிக் வில்வித்தை பெண்களுக்கான தனிநபர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பம்பயலா தேவி, கிரீஸ் நாட்டைச் சேர்ந்த இவான்ஜெலியா பசாராவை 6-4 என வீழ்த்தினார். பின் இரண்டாவது சுற்றில் பம்பயலா, மெக்சிகோவின் அய்டா ரோமனை சந்தித்தார். இதில் துவக்கத்தில் இருந்தே சொதப்பிய பம்பயலா தேவி 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து
வெளியேறினார்.
பெடரர் முன்னேற்றம்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் இரண்டாவது சுற்றில் உலகின் "நம்பர்-1 வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் ஜுலியன் பெனட்டியாவை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய பெடரர் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், போலந்தின் உர்சுலா ரத்வான்ஸ்காவை சந்தித்தார். இதில் செரினா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் டேவிட் பெரர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
செய்னா நேவல் வெற்றி
ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவலின் வெற்றிநடை தொடர்கிறது.
நேற்று இரவு நடந்த கடைசி லீக் போட்டியில் உலகின் 5ம் நிலை வீராங்கனையான செய்னா, பெல்ஜியத்தின் டான் லியானியை சந்தித்தார். இதில் அசத்தலாக ஆடிய செய்னா முதல் செட்டை 21-4 என்ற கணக்கில் 9 நிமிடங்களில் வென்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் 21-14 என்ற கணக்கில் 15 நிமிடங்களில் வென்றார். இறுதியில் செய்னா 21-4, 21-14 என்ற நேர் செட்களில் வெறும் 24 நிமிடங்களில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பயஸ்-விஷ்ணு வெற்றி
ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
நேற்று இரவு நடந்த முதல் சுற்றுப் போட்டியில் அபாரமாக ஆடிய பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ், ஜீன்-ஜுலியன் ரோஜர் ஜோடியை 7-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
0 comments:
Post a Comment