டிராவிட் தலைமையில் இந்திய அணி பெற்ற வெற்றியை அனைத்து வீரர்களும் கொண்டாடவில்லை. இவருக்கு எதிராக சிலர் செயல்பட்டனர்,''என, கிரெக் சாப்பல் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பல். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவருக்கும் அப்போதைய கேப்டன் கங்குலிக்கும் இடையே நிறைய பிரச்னைகள் வெடித்தன. தற்போது இவர் முன்னாள் வீரர் டிராவிட் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் சாப்பல் கூறியிருப்பதாவது:
இந்திய அணியின் சிறந்த கேப்டனாக டிராவிட் திகழ்ந்தார். இவரது தலைமையில் தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் இந்தியா வென்றது.
தொடர்ந்து 17 போட்டிகளில் இரண்டாவதாக "பேட்' செய்து வெற்றி பெற்று சாதனை படைத்தது. எந்த சூழ்நிலையிலும் "சேஸ்' செய்வதே இவருக்கு பிடிக்கும். வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் வெற்றிகளை பெற்றார்.
இவரது வெற்றியை அணியில் இடம் பெற்ற அனைவரும் சேர்ந்து கொண்டாடாதது வருத்தமான விஷயம். சிலர் இவரது வளர்ச்சியை கண்டு பயந்தனர். இவருக்கு எதிராக செயல்பட்டனர்.
மற்ற கேப்டன்களுக்கு டிராவிட் முழு ஒத்துழைப்பு அளித்தார். இதே போன்றதொரு ஆதரவை இவருக்கும் அளித்திருந்தால், இந்திய கிரிக்கெட்டின் வரலாறு மாறியிருக்கும். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக டிராவிட் உருவெடுத்திருப்பார்.
கேப்டனாக டிராவிட் ஒருபோதும் தவறான முடிவு எடுத்ததில்லை. யாரையும் கடுமையாக பேசியதில்லை.
இலங்கையின் முரளிதரனின் சுழல் ஜாலத்தை சமாளிக்கும் உத்திகளை கண்டறிந்தார். துணிச்சலும், தன்னிம்பிக்கையும் தான் இவரை சிறந்த கேப்டனாக அடையாளம் காட்டியது.
இவ்வாறு கிரெக் சாப்பல் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment