இந்தியா-பாகிஸ்தான் கூட்டாக சாம்பியன்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டன.


இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டையில் முடிந்தததைத் தொடர்ந்து இரு அணிகளும் கூட்டாக சாம்பியனாயின.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சமி அஸ்லம் 134 ரன்களும், உமர் வஹீத் 48 ரன்களும் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் கலேரியா 10 ஓவர்களில் 37 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டம் டை: இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் அபராஜித் 90 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் வேகமாக வீழ்ந்தாலும், கேப்டன் உன்முகுத் சந்த் சதமடித்தார். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4-வது பந்தில் உன்முகுந்த் சந்த் ஆட்டமிழந்தார். அவர் 121 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 5-வது பந்தை எதிர்கொண்ட கலேரியா பவுண்டரி அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோரை சமன் செய்தது இந்தியா. இதனால் இந்தியா வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசிப் பந்தில் கலேரியா ஆட்டமிழந்தார்.

இந்தியாவால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், ஆட்டம் டையில் முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் இசான் அடில், முகமது நவாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் உன்முகுத் சந்த், பாகிஸ்தானின் சமி அஸ்லம் ஆகியோர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்நாயகன் மற்றும் சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருதையும் அஸ்லமே தட்டிச் சென்றார். சிறந்த பெளலராக இலங்கையின் பிஎச்டி கெüசல் தேர்வு செய்யப்பட்டார்.

0 comments:

Post a Comment