ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய மூவர்ணக்கொடி

ஒலிம்பிக் கிராமத்தில், இந்திய மூவர்ணக்கொடி திட்டமிட்டப்படி நேற்று ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஒத்திவைக்க வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

லண்டனில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்றப்படும். இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைவர் அஜித் பால் சிங் மற்றும் பெரும்பாலான விளையாட்டு நட்சத்திரங்கள் இன்னும் லண்டன் வந்து சேரவில்லை.

எனவே, கொடி ஏற்றும் நிகழ்ச்சியை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை லண்டன் ஒலிம்பிக் நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று தேசிய கீதம் இசைக்க,இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.அருகில் ஐந்து வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் கொடியும் ஏற்றப்பட்டது.

இதில் ஒலிம்பிக் கிராமத்தின் மேயர் சார்லஸ் ஆலன், இந்திய ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் முரளிதரன் ராஜா கலந்து கொண்டனர். இந்தியக் குழு முழுமையாக வராததால் வெறும் 35 வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றனர்.

வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, டென்னிஸ் வீரர்கள் மகேஷ் பூபதி, போபண்ணா, குத்துச்சண்டை அணியினர் மற்றும் ஹாக்கி வீரர்கள் சிலர் பங்கேற்றனர்.

கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, பயிற்சிக்காக ஜெர்மனி சென்றிருப்பதால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.

வீரர்களை வரவேற்று சார்லஸ் ஆலன் கூறுகையில்,"" பல்வேறு கலாசாரத்தில் இருந்து ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்திருக்கிறீர்கள். என்றும் மறக்கமுடியாத நினைவுகளோடு திரும்பிச் செல்வீர்கள் என நம்புகிறேன்.

இந்திய குழுவினர் முழுமையாக வராததால், இந்நிகழ்ச்சியை ஒத்தி வைக்க வேண்டுமென்ற நிர்வாகிகளின் கோரிக்கையை புரிந்து கொண்டோம். ஆனாலும், ஏற்கனவே திட்டமிட்ட அட்டவணையில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

இந்தியாவை போல பல்வேறு நாடுகளும் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை மாற்றி அமைக்க வலியுறுத்தின. இதனை ஏற்றுக் கொண்டால் ஒட்டுமொத்த போட்டிக்கும் இடையூறு ஏற்படும்,''என்றார்.

1 comments:

 1. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete